பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களவருக்கும்‌ உளவருக்கும்‌ சண்டை

151

தற்காகப் பணப் பெட்டியையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் போலப் பயந்து நடுநடுங்கிக் கொண்டு இருந்தோம். ஞானாம்பாள் ஒரு மூலையில் கண்ணீர்ப் பிரவாகத்துடனே கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தாள்.

மேற்கேயிருந்து வந்த திருடர்கள் இரஸ்தாவில் வந்து சேர்ந்து, நாங்கள் இருந்த சாவடிக்கு நேரே திரும்பி வந்தார்கள். அவர்கள் வரும் போது, அவர்களுக்கு நேரே கிழக்கே யிருந்து ஒரு பெருங் கூட்டம் வந்து அவர்களைப் பார்த்து, ““நீங்கள் ஆரடா?”” வென்று வினாவ, அவர்கள் “நீங்கள் ஆரடா” என்று எதிர்த்துக் கேட்டார்கள். உடனே கிழக்கேயிருந்து வந்தவர்களுக்குக் கோபம் உண்டாகி மேற்கேயிருந்து வந்தவர்கள் மேலே விழுந்து கத்திகளாலும் கழிகளாலும் யுத்தஞ் செய்ய ஆரம்பித்தார்கள். அவர்கள் அடித்துக் கொள்ளுகிற அடிகள், எங்கள் தலைமேலே அடிக்கிறது போலவே கேட்டு, நாங்கள் விடுவிடென்று நடுங்கிக் கொண்டிருந்தோம். அவர்கள் சண்டை செய்கிற காரணம் இன்னதென்று தெரியவில்லை. ஆனால் எனக்குத் தோன்றினதெல்லாங்கூடி அன்றைய தினம் திருடவேண்டிய முறை இன்னாருடையதென்று ஸ்தாபித்துக் கொள்வதற்காக அவர்கள் சண்டை செய்வதாக அனுமானித்தேன். அந்த இரு பக்ஷத்தாரும் சமான கக்ஷியாயிருந்தமையால் ஒரு கக்ஷிக்காவது தோற்புக் கெலிப்பு இல்லாமல் நெடு நேரஞ் சண்டை செய்தார்கள். ஆனால் கிழக்கேயிருந்து வந்த கூட்டத்தாருக்கு மறுபடியும் மறுபடியும் உப பலம் சேர்ந்து கொண்டிருந்தபடியால், அவர்கள் பக்ஷத்தில் ஜயம் உண்டாகி மேற்குத் திசையார் ஓட ஆரம்பித்தார்கள். அவர்களைக் கிழக்குத் திசையார் வெகு தூரம் வரையில் தொடர்ந்து போய்ப் பிற்பாடு நாங்கள் இருந்த சாவடியை நோக்கித் திரும்பினார்கள். அவர்கள் வருவதைப் பார்த்தவுடனே, எங்களிடத்தில் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த அற்பப் பிராணனும் மேற்குத் திசையார் போல ஓட ஆரம்பித்தது.