பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

பிரதாப முதலியார் சரித்திரம்

அந்தக் கூட்டத்தார் சிறிது தூரம் வந்து பிறகு நின்று விட்டார்கள். அவர்களில் இரண்டு பேர் மட்டும் எங்களை நோக்கி வந்தார்கள். அவர்களை யம தூதர்களாகவே எண்ணினோம். அவர்கள் தூரத்தில் வரும்போதே என் பெயரைச் சொல்லி மரியாதையாய்க் கூப்பிட்டுச் சொல்லுகிறார்கள்: “ஐயா! பிரதாப முதலியாரே! திருடர்கள் ஓடிப் போய்விட்டார்கள்; இனி மேல் நீங்கள் அஞ்சவேண்டாம்; நாங்கள் திருடர்கள் அல்ல” என்று சொல்லிக் கொண்டு எங்களை நோக்க, எங்கள் வேலைக்காரன் ““ஐயா! நான் குளத்துக்கு ஜலம் மொள்ள வந்தபோது நாங்கள் ஜாக்கிரதையா யிருக்கவேண்டு மென்று சொன்னவர்கள் நீங்கள் தானா?”” என்று வினாவ, அவர் “ஆம்” என்று சொல்லிக்கொண்டு என்னிடம் வந்து நமஸ்காரஞ் செய்தார். அவருடைய முகக் குறியால் அவர் யோக்கியர் என்று தெரிந்து கொண்டு நானும் அவருக்கு நமஸ்காரஞ் செய்து “நீங்கள் யார்?” என்று வினாவ, அவர் சொல்லுகிறார்:—

“நான் இதற்கு இரண்டு நாழிகை வழி தூரத்திலிருக்கிற பொன்னூரில் வசிக்கிறவன். என் பெயர் புண்ணியகோடி செட்டி. என் தகப்பனாராகிய ஞானி செட்டி சத்தியபுரியில் தங்கள் தகப்பனா ரிடத்தில் அனேக வருஷகாலம் காரியம் பார்த்து வந்து நான் அதி பால்லியமா யிருக்கும்போது இறந்துபோனார். அதுமுதல் என்னையும் என் தாயாரையும் தங்களுடைய தாயாரும் தகப்பனாரும் அன்ன வஸ்திரங் கொடுத்து ஆதரித்ததுமல்லாமல் எனக்கு வித்தியாப்பியாசமும் செய்து வைத்தார்கள். இது நீங்கள் பிறக்கிறதற்குச் சில காலத்துக்கு முன் நிகழ்ந்த சங்கதியானதால் தாங்கள் அறிய மாட்டீர்கள். சத்தியபுரியில் தங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டில் நானும் என் தாயாரும் குடியிருந்துகொண்டு, மேற் சொன்ன படி தங்களுடைய தாய்