பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

வுடனே, புதையல் அகப்பட்ட விவரமும், மற்றச் சங்கதிகளும், அவர்களுக்கு விக்ஞாபித்தேன். அவர்கள் “‘உன்னைப் போல் நல்ல பிள்ளைகள் உண்டா?’” என்று என்னைப் புகழ்ந்து கொண் டிருக்கும் போது, என் தாயார் இனிமேல் மறைக்கக் கூடாதென்று நினைத்து வெண்கலத் தோண்டி யுடனே வந்து புதையல் அகப்பட்ட விவரத்தை உண்மையாகவே தெரிவித்தாள். அவள் முந்தி மறைக்க யத்தனப் பட்டதை உங்கள் தாய் தந்தையர்கள் காட்டிக்கொள்ளாமலே அவளையும் புகழ்ந்தார்கள்.

பிற்பாடு தங்கள் தாய் தந்தைமார்கள் அறைக்குள்ளே போய்ச் சற்று நேரம் ஆலோசித்துக்கொண்டு வெளியே வந்து என்னைப் பார்த்து “பொய்யும் சூதும் வஞ்சனையும் நிறைந்த இந்த உலகத்தில் உன்னைப் போல யோக்கியமான பிள்ளை அகப்படுவது அருமையானதால் உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த சம்மானமாக அந்தப் புதையலைக் கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார்; அந்தத் திரவியத்தை நீயே வைத்துக்கொண்டு சுகமாயிரு” என்றார்கள். இதைக் கேட்டவுடனே நானும் என் தாயாரும் ஆனந்த பாஷ்பஞ் சொரிந்துகொண்டு அவர்களுடைய பாத கமலங்களில் விழுந்து விழுந்து அநேகந் தரம் சாஷ்டாங்க நமஸ்காரஞ் செய்தோம். அவர்கள் நாங்கள் மறுபடியும் விழாதபடி எங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். இப்போது நான் வசிக்கிற பொன்னூர்க் கிராமத்தை அவர்களே என் பெயரால் கிரயம் வாங்கி எனக்குத் தகுந்த பிராயம் வருகிறவரையில் என் தாயுடன் பிறந்த அம்மானைக் காரிய துரந்தரனாக நியமித்து என்னைக் குடும்பப் பிரதிஷ்டை செய்தார்கள். நான் இப்போது சாப்பிடுகிறது உங்களுடைய அன்னந்தான்; எரிக்கிறது உங்களுடைய விளக்குத் தான்; தண்ணீர்த் துறையில் உங்களுடைய வேலைக்காரனைப் பார்த்த போது நீங்கள் வந்திருக்கிற சமாசாரம் தெரிந்துகொண்டேன்; திருடர்களே உங்களை ஏமாற்றி இந்தச் சாவடியில் தங்கும்படி செய்ததாக எனக்குத் தோன்றின படியால்