பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புண்ணியகோடி செட்டி உதவி

அந்த ஆபத்தைத் தீர்க்க என்ன உபாயஞ் செய்யலாமென்று நான் பல வகையில் யோசித்தேன். என்னுடைய கிராமத்துக்கு உங்களை அழைத்துக்கொண்டு போகலாமென்றால் வண்டி போகும்படியான மார்க்கமில்லை. நீங்கள் வயல் வழியாக நடக்கமாட்டீர்களானதால் நானே என் கிராமத்துக்குப் போய் ஆட்களைச் சேர்த்துக்கொண்டு வருவதே நலமென்று நினைத்து அந்தப் படி ஆட்களைக் கூட்டிக்கொண்டு அதி சீக்கிரமாக வந்தேன். நாங்கள் வந்த சமயமும் திருடர்கள் வந்த சமயமும் ஒத்துக்கொண்டபடியால் திருடர்கள் உங்களைக் கிட்டாதபடி அவர்களை அடித்துத் துரத்தி விட்டோம். அதோ அங்கு நிற்கிற கூட்டம் நம்முடைய கூட்டந்தான். அவர்கள் எல்லோரும் இங்கு வந்தால் திருடர்களென்று நினைத்து நீங்கள் பயப்படுவீர்களென்று கருதி நாங்கள் இருவர் மட்டும் வந்து உங்களைக் கண்டோம்; கண் குளிர்ந்தோம். நாங்கள் செய்த பூஜாபலம் இப்போதுதான் எங்களுக்குப் பிராப்தமாயிற்று. உங்களுடைய தர்ம பத்தினியின் உத்தம குணங்களை இதற்கு முன் கேட்டு நாங்கள் சுரோத்திராநந்த மடைந்தோம். இப்போது அந்த உத்தமியைத் தரிசித்து நேத்திராநந்தத்தை அடைகிறோம். எங்களுடைய கண்ணுக்கும் காதுக்கும் இந்த விவாதம் இன்றோடு தீர்ந்துவிட்டது” என்றார். நான் அவரைப் பார்த்து “என் தாய் தந்தையர் உங்களுக்குச் செய்த உபகாரம் ஒரு பாக்காகவும், நீங்கள் எங்களுக்குச் செய்த உபகாரம் தோப்பாகவும் மாறிவிட்டது. நீங்கள் சமயத்தில் வந்து எங்களை ரக்ஷிக்காவிட்டால் எங்களுடைய யாத்திரை பரலோக யாத்திரையாக முடிந்திருக்கும்.

"காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"

சமயத்திற் செய்த ஒரு சிறிய உதவி பூமியினும் பெரிதென்று திருவள்ளுவர் சொல்லுகிறார். அப்படி-