பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலி என்னும் கிலி

157

நின்று, கொஞ்சம் வெளிச்சம் கண்ட வுடனே, அந்தக் கெபிக் குள்ளாகப் பார்த்தோம். எங்களுக்குக் கொஞ்ச தூரத்தில், அந்த குகையில், இரண்டு புலிகளைக் கண்டு, நாங்கள் திகில் அடைந்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஓட ஆரம்பித்தோம். எங்கள் வேலைக்காரர்கள் எங்களையும் அவர்களுடைய பெண்சாதிகளையும் விட்டு விட்டு ஒரு நிமிஷத்தில், போன இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொண்டார்கள். நான், ஞானாம்பாளையும், வேலைக்காரிகளையும் முன்னே ஓடச் சொல்லி, பின்னே ஓடினேன். ஓடச் சக்தியில்லாமல், அந்த ஸ்திரீகளும் நானும் சேற்றிலே சறுக்கி விழுந்து, கொண்டு தள்ளாடித் தள்ளாடி ஓடும் பொழுது பின்னே திரும்பிப் பார்த்தோம். அந்தப் புலிகள் குகையை விட்டு ஓடி வருகிறதைக் கண்டு, அந்த ஸ்திரீகளைப் பார்த்து ““புலிகள் தொடர்ந்து வருகிறபடியால் சீக்கிரமாய் ஓடுங்கள்!”” என்றேன். இதைக் கேட்டவுடனே, அந்த வேலைக்காரிகள் கிலி பிடித்து, கீழே விழுந்து, உதைத்துக் கொண்டார்கள். அவர்களை அந்த ஸ்திதியில் விட்டு எப்படிப் போகிற தென்று, நானும் ஞானாம்பாளும் மலைத்து நின்றோம். புலிகள் சமீபித்தவுடனே, அவைகளைச் சுடலா மென்று, என் கையிலிருந்த துப்பாக்கியில் குண்டு போட்டுக் கெட்டிக்க ஆரம்பித்தேன்.

ஞானாம்பாள் சற்று நேரம் அந்தப் புலிகளை உற்றுப்பார்த்து ““அவைகள் நாலுகாற் புலிகளாயிராமல் இரண்டு காற் புலிகளாகக் காணப்படுகின்றன; அவைகளை நன்றாய்ப் பாருங்கள்”” என்றாள். நான் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தவுடனே அந்தப் புலிகளிடத்தினின்று ஒரு வாக்கியம் புறப்பட்டது; என்னவென்றால் “““ஐயா! எங்களைச் சுட வேண்டாம். நாங்கள் புலிகள் அல்ல. நாங்கள் வேஷக்காரர்கள்”““ என்பது தான். சற்று நேரத்தில் நெருங்கி வந்து, எங்களைப் பார்த்து “““நாங்கள் அல்லாப் பண்டிகைக் காகப் புலி வேஷம் போட்டுக்கொண்டு பல ஊர்களுக்குப் போய் யாசகம் வாங்குகிற