பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பிற்குக்‌ கண்‌ இல்லை

159

தேகத்தில் காயம் பட்டிருக்குமே”” என்று அநுதாபப்பட்டார்கள். பக்ஷத்துக்குக் கண் இல்லை என்பது அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

இவ்வகையாகச் சிலநாள் யாத்திரை செய்த பின்பு ஒரு நாள் எங்களுக்கு நேரே ஒரு நகரம் குறுக்கிட்டது. அது என்ன ஊரென்று விசாரிக்க, தேவராஜப் பிள்ளையினுடைய ஊராகிய ஆதியூரென்று கேள்விப்பட்டோம். உடனே எங்களுக்குப் பெரிய ஆச்சரியம் உண்டாகி ஒளியப் போயும் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல், நாம் ஒருவரும் காணாதபடி தூரதேசத்துக்குப் போக உத்தேசித்துப் போகும்போது இந்த ஊர் வந்து குறுக்கிட்டதே! இந்த ஊருக்கு வருகிறதென்றும் நாம் நினைக்கவே இல்லையே! நாம் இவ்வளவு சமீபத்தில் வந்தும் அவர்களைப் பார்க்காமல் போனால் பிற்பாடு அவர்களுக்கு உண்மை தெரியும்போது மனஸ்தாபப்படுவார்களே! இந்தத் தரும சங்கடத்துக்கு என்ன செய்கிறதென்று நானும் ஞானாம்பாளும் வண்டியை நிறுத்தி ஆலோசித்துக் கொண்டிருக்கும்போது ரஸ்தாவில் எங்களுக்கு எதிரே நாலு குதிரைகள் கட்டின இரண்டு இரதங்கள் ஓடி வந்தன. முன்னர் வந்த ரதத்தில் யார் இருக்கிறார்களென்று எட்டிப் பார்த்தேன். அதில் தேவராஜப் பிள்ளையும் அவருடைய மகன் கனகசபையும் இருந்தார்கள். அவர்கள் என்னைப் பார்த்தவுடனே ரதத்தை நிறுத்திக் கீழே குதித்தார்கள்; நானும் கீழே குதித்தேன்; அவர்கள் முகமகிழ்ச்சியோடும் அகமகிழ்ச்சியோடும் என்னைக் கட்டிக்கொண்டு “நீங்கள் வர இந்த ஊர் என்ன தவஞ் செய்ததோ நாங்கள் செய்த புண்ணிய பலன் இன்றைக்குத் தான் எங்களுக்குக் கிடைத்தது.” என்று பலவாறாக உபசரித்தார்கள். மற்றொரு ரதத்திலிருந்து தேவராஜப் பிள்ளையின் பத்தினியும் அவருடைய தங்கையும் கீழே இறங்கி ஞானாம்பாளைத் தழுவிக்கொண்டு பலவகையான முகமன் கூறினார்கள். தேவராஜப் பிள்ளையும் கனகசபையும் ஞானாம்பாளுக்குத்