பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

பிரதாப முதலியார்‌ சரித்திரம்‌

தக்கபடி இனிய வசனம் கூறி அவளை அந்த ஸ்திரீகள் வந்த ரதத்தில் ஏற்றுவித்து என்னைத் தங்களுடைய ரதத்தில் ஏற்றிக்கொண்டு ஊருக்குத் திரும்பினார்கள்.

நாங்கள் வழியே போகும்போது தேவராஜப் பிள்ளை என்னை நோக்கி “இன்றையத்தினம் உங்கள் தந்தையாரிடத்திலிருந்து தபால் மார்க்கமாக வந்த கடிதத்தில் நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஊரைவிட்டுப் போய்விட்டதாகவும் இன்ன ஊருக்குப் போனீர்களென்று தெரியவில்லையென்றும் தாங்கள் பல ஊர்களுக்கு மனுஷர்களும் கடிதங்களும் அனுப்பி இருப்பதாகவும் நீங்கள் இந்த ஊருக்கு வந்தால் உடனே தெரிவிக்கவேண்டுமென்றும் எழுதப்பட்டிருந்தது. நீங்கள் இந்த ஊருக்கு வராமல் வேறே எங்கே போகிறீர்களோ என்று நாங்கள் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தோம். உங்களை எங்கள் தெய்வந்தான் கொண்டு வந்துவிட்டது; நாங்கள் கிருதார்த்தர்களானோம்” என்று சொல்லிப் பின்னும் என்னைப் பார்த்து “நீங்கள் ஒருவருக்கும் சொல்லாமல் ஏழைகளைப் போல ஊரை விட்டு வெளிப்பட்டதற்குக் காரணம் என்ன?” வென்று வினாவினார். என் தகப்பனாருடையவும் மாமனாருடையவும் வீணான சண்டையை வெளிப் படுத்த எனக்கு மனமில்லாமலிருந்தாலும் பொய்யான காரணத்தைச் சொல்லக் கூடாதென்று நினைத்து ஞானாம்பாளுக்குக் கர்ப்பச் சின்னங்கள் தோன்றினதும், அந்தக் கர்ப்பக் குழந்தையை என் மாமனார் ஸ்வீகாரம் கொடுக்கும்படி கேட்டு அது மூலமாகச் சண்டை விளைந்ததும் நான் சங்க்ஷோபமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்டவுடனே அவருக்கு உண்டான பெருஞ் சிரிப்பு எப்படிப்பட்டதென்றால் அவர் அவ்வகையாக இன்னும் சற்று நேரம் சிரித்திருப்பாரானால் அவர் மரித்திருப்பாரென்பதும் கனசபை தகப்பன் இல்லாப் பிள்ளையாகி இருப்பான் என்பதும் நிச்சயமே. பிறகு எனக்கு வருத்தமாயிருக்குமென்று அவர் சிரிப்பை அடக்கிக் கொண்டு சொல்லுகிறார்:—