பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

பிரதாப முதலியார் சரித்திரம்

பாபிஷ்டர்களும் இந்த உலகத்தில் இருப்பார்களோ? நான் உனக்குச் செய்ததெல்லாம் கொடுமை; நீ எனக்குச் செய்ததெல்லாம் நன்மை; நான் உன்னுடைய குணத்தையும், என்னுடைய குணத்தையும் யோசிக்குமிடத்தில் நான் உனக்குத் தகப்பனாயிருக்க எவ்வளவும் யோக்கியன் அல்ல. நான் உனக்குச் செய்த துரோகமே, நெருப்பாக வந்து விளைந்ததே தவிர வேறல்ல. அந்த நெருப்பினின்று நீ என்னை ரக்ஷித்தபடியால் நீயே என்னைப் பெற்ற தாயும் தகப்பனும் ஆனாய்!” என்று பலவகையாக ஸ்தோத்திரஞ் செய்ததுமன்றி தான் செய்த கொடுமைகளை நினைத்து நினைத்து மனம் உருகி அழுதான். அன்று முதல் மூத்த பிள்ளையே தனக்குச் சகல பாக்கியமுமென்று நினத்து அவன் வசத்தில் ஆஸ்திகளையெல்லாம் ஒப்புவித்துத் தானும் இளைய குமாரனும் அவனால் போஷிக்கப்பட்டு வாழ்ந்தார்கள்.

வெகு காலத்துக்கு முன்பாக யூரோப்பிலே, (Europe) சிசிலி (Sicily) நாட்டில் இருக்கிற அக்கினி மலை அக்கினியைக் கக்கி, அநேக ஊர்களைச் சுட்டு நிர்மூலமாக்கினபோது ஜனங்கள் எல்லாரும் அதிக விலை பெற்ற சொத்துக்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்கள். அவர்களில் அநப்பியஸ் (Anapius) அம்பினோமஸ் (Amphinomas) என்கிற இரண்டு வாலகர்கள் யாதொரு ஆஸ்தியையும் தொடாமல் வயோதிகர்களான தங்களுடைய தாய் தந்தைகளைத் தூக்கிக்கொண்டு சென்று அவர்களுடைய பிராணனை ரக்ஷித்துப் பிரக்கியாதி அடைந்தார்கள்.

ரோமாபுரியை மூவேந்தர் கூடி அரசாக்ஷி செய்து வந்த காலத்தில் பெயர் பெற்ற பிரசங்க வித்வானாகிய சிசரோ (Cicero) என்பவரையும் அவருடைய சகோதர-