பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xx

யிடம் ஒப்படைத்தார். அதுபோது நீதிபதி டேவிட்சன் வேற்றூருக்கு மாற்றலாகிச் செல்ல நேர்ந்ததால், அவர் அந்த ஆவணங்களைப் பார்வையிட்டு, மேலாணை நீதி மன்றத்திற்கு அனுப்புவதற்காகத் தன்னுடன் எடுத்துச் சென்றார். இறைவன் திருவருள் வேறாக இருந்ததால், டேவிட்சன் எதிர்பாரா வகையில் நோயுற்று இறந்தார். அவர் எடுத்துச் சென்ற ஆவணங்கள் மேலதிகாரிகளுக்கு அனுப்பப்படாமல் அவரிடமே தங்கிவிட்டன. வேதநாயகர் இதனை அறியார்.

சிறிது காலம் சென்றபின், இந்து முஸ்லீம் கலக வழக்கு மாநில நீதி மன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டபோது, அது தொடர்பான ஆவணங்கள், மாவட்ட நீதி மன்றத்திலிருந்து வரவில்லை யென்பது புலனாயிற்று. அவற்றை உடனே அனுப்பி வைக்குமாறு மாவட்ட நீதிபதிக்கு ஆணை அனுப்பப்பட்டது. அப்போது நீதிபதியாயிருந்தவர் மேஸ்தர் கிரீன்வே என்பவர். அவர் டேவிட்சனுக்கு எதிர்மறையான கயமைக் குணம் படைத்தவர். ஆதலால், அரசாங்க ஆணை கிடைத்தவுடன், அவ்வழக்குத் தொடர்பான ஆவணங்கள் அனுப்பப்படாமைக்கு வேதநாயகரே காரணமானவர் என்று முடிவு செய்து, அவரை வேலையினின்று விலக்கினார். இதனைத் தன் மேலதிகாரிகளுக்கும் தெரிவித்தார். இங்ஙனம், வேதநாயகர் தான் இழைக்காத குற்றத்திற்கான தண்டனையை ஏற்க வேண்டியவரானார்.

உண்மைக்கு வெற்றி :

வேலையிழந்த வேதநாயகர் வேதனையுற்றார். ஆயினும் அநீதியை எதிர்த்துப் போராட எண்ணினார். ஆவணங்களை மொழி பெயர்த்து அப்போதைய நீதிபதியிடம் கொடுத்த செய்தியை மாநில நீதி மன்றத்தார்க்குத் தெரிவித்து மனுவொன்று எழுதினார். மாதங்கள் பல கடந்தன. மறுமொழியொன்றும் கிடைக்கவில்லை. மீண்டும் அதே உண்மைகளை விளக்கிக் கூறி மற்றொரு மனுவையும் அனுப்-