பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

பிரதாப முதலியார் சரித்திரம்

தையன் திருடனைப் போலச் சற்று நேரம் பரக்கப் பரக்க விழித்தபிற்பாடு “தகப்பனார் வியாதியா யிருக்கிறார்; தாயாரை மட்டும் அழைத்து வருகிறேன்” என்று சொன்னான். உடனே அவர்கள் எழுந்து “உம்முடைய தகப்பனார் வியாதியாயிருந்தால் அவரை அகத்தியம் நாங்கள் பார்க்கவேண்டும்; அவர் இருக்கிற இடத்தைக் காட்டும்” என்று அனந்தையனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். அவன் கொலைக் களத்துக்குப் போகிறவன் போல் போகும்போது அவனுடைய தாயார் எதிரே வந்தாள். அவளைக் காண்பித்துவிட்டால் பிறகு தன் தகப்பனைத் தேடமாட்டார்களென்று நினைத்து இவள் தன் தாயென்று அனந்தையன் காட்டினான். உடனே அவர்கள் “அம்மா! உங்களைப் பார்த்தோம்; அகமகிழ்ந்தோம்; உங்கள் பர்த்தாவையும் நாங்கள் பார்க்க விரும்புகிறோம்; அவர் இருக்கிற இடத்தைக் காட்ட வேண்டும்” என்று சொல்ல, அந்த அம்மணி கபடம் இல்லாமல் அவர்களை அழைத்துக் கொண்டுபோய்த் தெருத் திண்ணையிலிருந்த தன் பர்த்தாவைக் காட்டிவிட்டாள். உடனே அவர்கள் அனந்தையனுடைய முகத்தைப் பார்த்தார்கள். அனந்தையன் வெட்கத்தினால் பூமி தேவி முகத்தைப் பார்த்தான். அந்தக் கனவான்கள் அனந்தையனைப் பார்த்து “உம்முடைய தகப்பனாரை வேலைக்காரனென்று சொன்னீரே! இது தர்மமா?” என்று கேட்டார்கள். இதைக் கேட்டவுடனே சுப்பையருக்குத் தன் பிள்ளை மேல் பிரமாதமான கோப சன்னதம் உண்டாகி அந்தக் கனவானை நோக்கி “ஐயா! இந்தப் பயலுக்கு நான் வேலைக்காரன் தான். இவனுடைய தாயார் வேலைக்காரனுடன் தேக சம்பந்தப்பட்டு இவனைப் பெற்றாள். அது உண்மையா பொய்யா அவனுடைய தாயாரையே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்” என்று சரமாரியாகக் கொடுங் சொற்களைப் பிரயோகித்தார். உடனே அனந்தையன் அநந்த லோகத்துக்கே போய் விட்டதுபோல எந்த மூலையிலோ போய் ஒளிந்துகொண்டான்.