பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிள்ளையை இகழ்ந்த பெற்றோர்‌

193

அந்தக் கனவான்கள் “இந்தப் பிதுர்த் துரோகி வீட்டில் இருந்தாலும் பாவம்” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டார்கள். சுப்பையரும் அவர் பத்தினியும் இனிமேல் இந்தச் சண்டாளன் வீட்டில் இருப்பது மரியாதையல்ல வென்று நினைத்துப் பிரத்தியேகமாக ஒரு சத்திரத்துக்குக் குடி போய்விட்டார்கள். அவர்கள் சில மத்தியஸ்தர் மூலமாக “நாங்கள் உன்னுடன் சேர்ந்திருப்பதுதான் உனக்கு அவமானமாயிருக்கிறதே! நாங்கள் சத்திரத்திலே குடி யிருக்கிறோம்; எங்களுக்குச் சாப்பாட்டுக்கு மார்க்கஞ் செய்யவேண்டும்”என்று மகனுக்குச் சொல்லி அனுப்பினார்கள். அவன் “நான் ஒன்றும் கொடுக்க மாட்டேன்; ஊரில் பிக்ஷையெடுத்துச் சாப்பிடுங்கள்” என்று கோபமாய் மறுமொழி சொல்லி யனுப்பினான். அதைக் கேட்டவுடனே சுப்பையரும் அவர் பாரியும் கந்தைத்துணிகள் உடுத்திக் கொண்டு கையில் ஓடுகளை யெடுத்துக் கொண்டு “நாங்கள் இந்த ஊர் முன்சீப்தாருடைய தாய் தந்தையர்கள்; எங்களை ஆதரிக்காமல் பிக்ஷையெடுக்கும்படி விட்டுவிட்டான்; எங்களுக்குப் பிக்ஷையிடுங்கள்!” என்று வீடு வீடாகச் சொல்லி அனந்தையனை லச்சை கெடுக்க ஆரம்பித்தார்கள். அதை அவன் கேள்விப்பட்டு அவமானத்தையடைந்து “ஒரு சக்கிலியத் தொழிலாவது செய்து பிழைக்கக் கூடாதா? பிக்ஷை யெடுக்க வெட்கமில்லையா?” என்று சொல்லியனுப்பினான். உடனே சுப்பையர் “நான் முன்சீப்தாருடைய தகப்பன்; நான் சக்கிலியத் தொழில் செய்கிறபடியால் செருப்பு ஜோடு முதலியவர்கள் என்னிடத்தில் வாங்கிக்கொள்ளலாம்” என்று விளம்பரம் எழுதித் தான் குடியிருக்கிற சத்திரத்தின் வாசற்படியில் ஒட்டி வைத்தார். இந்த சமாசாரங்கள் ஊரெங்கும் பிரசித்தமாகி அனந்தையனைக் காரித் துப்பாதவர்கள் ஒருவருமில்லை. அவன் நிரீச்சுரவாதி யென்றும் பாப புண்ணியம் பாராத பரம சண்டாளனென்றும் பிதுர்த் துரோகியென்றும் துரைமார்கள் கேள்விப்பட்டு அந்தக்

13