பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

பிரதாப முதலியார் சரித்திரம்

காரணத்துக்காகவே அவனை உத்தியோகத்தினின்று நீக்கிவிட்டார்கள். அவனுக்கு உத்தியோகம் போனபிற்பாடு அவனை மதிக்கிறவர்கள் ஒருவருமில்லை. அவன் எல்லாருக்கும் தீங்கு செய்தபடியால் உத்தியோகம் போனபிறகு அவனுக்கு எல்லாரும் தீங்கு செய்யத் தொடுத்தார்கள். தெய்வம் இல்லை; பாப புண்ணியம் இல்லயென்று அவன் எப்பொழுதும் செய்து வந்த பிரசங்கத்தைக் கேட்டுக் கேட்டு அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் துன்மார்க்கத்திற் பிரவேசித்து அவனை அலட்சியஞ் செய்து வந்தார்கள்.

அவனுக்கு உத்தியோகம் போன விசனத்தினால் வியாதி நேரிட்டு அவன் படுத்த படுக்கையில் இருக்கும்போது அவனுடைய பெண்சாதி பிள்ளைகள் சற்றும் இரக்கமில்லாமல் அநேகம் பொருள்களை யெடுத்துக் கொண்டு அவனை அந்தரத்தில் விட்டு விட்டு ஓடிப்போனார்கள். அவனுடைய வேலைக்காரர்களும் அவர்களுடைய கையில் அகப்பட்டதைக் கிரகித்துக் கொண்டு சொல்லாமற் புறப்பட்டு நடந்துவிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட நிராதரவான ஸ்திதியிலிருக்கும்போது திருடர்கள் வந்து பிரவேசித்து வியாதியிலிருந்தவனைத் தூணிலே சேர்த்துக் கட்டிப் புதையலைக் காட்டும்படி கணக்கில்லாத அடிகள் அடித்தார்கள். அவன் கதறிக்கொண்டு “இப்படி அக்கிரமஞ் செய்யலாமா?” என்று கேட்க அவர்கள் “நீ தான் தெய்வம் இல்லை; பாப புண்ணியம் இல்லையென்று உபதேசிக்கிறாயே! அப்படியிருக்க அக்கிரமம் ஏது?” என்று மறுபடியும் அடித்தார்கள். அவன் “ராஜ தண்டனை இல்லையா?” என வினவ, அவர்கள் “சாட்சி இல்லாவிட்டால் ராஜதண்டனை ஏது? உனக்கு சாட்சி சொல்ல யார் இருக்கிறார்கள்?” என்று மீளவும் அடித்தார்கள். அவன் அடி பொறுக்கமாட்டாமல் புதையலைக் காண்பித்தான். அவர்கள் உள்ளதெல்லாம் வாரிக்கொண்டு வெளியே போகும்போது அனந்தையன் அவர்களைப் பார்த்து ““இப்படி அநியாயம் செய்தீர்களே!