பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxii

ருக்கு பின் மாயூரத்திற்குமாற்றப்பட்டார். அங்கு 1872ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நீதிபதியாக வேலை பார்த்தார்.

“நீதியென்பது மதில்மேல் பூனை” என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். துலாக் கோலின் ஊசிபோல ஒருபக்கமும் சாயாது நடுநிலையில் நின்று நீதி வழங்கப்பட வேண்டும் என்று அறநூல்கள் அறிவிக்கின்றன. ஆயினும் அவ்வாறு நீதி வழங்கப்படுகிறதா என்பது பெரும் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. நீதிமன்றங்கள் நேர்மையாக இயங்க இயலாமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன வழக்குத் தொடுப்பவர்கள், பல பொய்யுரைகளையும் புனைந்துரைகளையும் சேர்த்தே வழக்குத் தொடுப்பார்கள். அவர்களின் சார்பாக வாதாடுகின்ற வழக்குரைஞர்களும், வாக்கு வன்மையால் மெய்யைப் பொய்யாகவும் பொய்யை மெய்யாகவும் மாற்றுவார்கள். சாட்சிகளாக வருகின்றவர்களோ. பொய் சொல்லும்படியாகப் போதனை செய்யப்பட்டு அழைத்து வரப்படுவார்கள். இவர்களின் கூற்றுகளை அலசி, ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடிப்பது என்பது முயற்கொம்புதான். இவையெல்லாம் போதாது என்பதுபோவ, நீதிபதிக்குக் கையூட்டு (இலஞ்சம்) கொடுத்துத் தம் சார்பாகத் தீர்ப்பளிக்கவேண்டுமென்று வேண்டுகிற ‘பெரியவர்களும்’ உண்டு. இவற்றிற்கெல்லாம் தப்பிப்பிழைத்தால்தான் நீதி என்று ஒன்று கிடைக்கும்.

நம் வேதநாயகர் நீதிபதியாக இருந்த காலத்திலும் இதே நிலைதான். நீதித்துறையில் நிலவியிருந்தது. ஆனாலும், இறைப்பற்றும், நற்பண்புகளும் நிறையப்பெற்ற வேதநாயகர் நல்ல நீதிநாயகராகவே விளங்கினார். தம்மிடம் வந்த வழக்குகளைத் தம் நுண்மாண் நுழை புலத்தால் நுணுகி ஆராய்ந்து உண்மையறிந்து தீர்ப்பு வழங்கினார். வழக்குரைஞர்களோ, கையூட்டோ அவரது நேர்மையைக் கெடுக்க அவர் இடந்தரவில்லை. ஆகவே, “அவரிடம் நீதிகிடைக்கும்“ என்ற பேச்சு எங்கும் பரவியது, “ஏழைக்கு இரங்கிடும் வேதநாயகர் எப்போது வருவாரோ- கச்சேரிக்கு எப்போது