பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

பிரதாப முதலியார் சரித்திரம்

எங்களுக்காகச் சர்வப் பிரயத்தனஞ் செய்வீர்களே! இப்போது அந்த நம்பிக்கையும் இல்லாமற் போய்விட்டதே! நான் என்ன செய்வேன்?” என்று சொல்லிக் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதார். அப்படியே ஒவ்வொருவரும் தங்களுடைய துயரத்தைச் சொல்லிப் பொருமினார்கள். அப்போது மண்ணூம், விண்ணும், மரமும், மலையும், சகலமும் அழுவது போல் தோன்றின. அந்த இரண்டு பாவிகளாகிய விசாரணைக் கர்த்தர்களுடைய மனம் மட்டும் இரங்கவில்லை.

புருஷர்களாகிய எங்களுடைய கதியே இப்படியிருக்கும்போது எங்களுடைய ஸ்திரீ ஜாதிகள் பட்ட துக்கங்களை நான் எப்படி விவரிக்கப் போகிறேன்? அப்போது நான் கூட இராவிட்டாலும் நான் கேள்விப்படதை எழுதுகிறேன். இந்தச் சமாசாரம் அவர்களுக்குத் தெரிந்த உடனே பட்டணம் அல்லோல கல்லோலமாய்ப் போய்விட்டது. எல்லா ஸ்திரீகளும், பாளையதார் அரண்மனையில் வந்து கூட்டங்கூடித் தலைமயிரைப் பிச்சிக்கொண்டும், வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டும், முகத்தில் அறைந்துகொண்டும், வயிற்றில் அடித்துக்கொண்டும் கீழே விழுந்து புரண்டு புரண்டு அழுதார்கள். அவர்களுடைய கூந்தல்கள் மேகங்கள் போலவும், அவர்களுடைய தேகங்கள் மின்னல் போலவும், அவர்களுடைய கூக்குரல் இடியோசை போலவும், அவர்களுடைய கண்ணீர் மழை பொழிவது போலவும் இருந்தன. “ஐயோ! எங்கள் நாயகர்களை இழந்து போனோமே! இனிமேல் அவர்களை ஒருநாளும் பார்க்கமாட்டோமோ? எங்களுடைய ஆஸ்தி பாஸ்திகளையும் தோற்றோமே! நாங்களும் எங்கள் பிள்ளைகளும் என்ன செய்வோம்? எந்தத்தெருவில் நிற்போம்?” என்று புலம்பினார்கள். அவர்களுடன் அழுது புலம்பிக் கொண்டிருந்த என் தாயார் திடீரென்று எழுந்து மற்ற ஸ்திரீ ஜனங்களைப் பார்த்து “தங்கைமாரே! தமக்கைமாரே! அழுது பிரயோசனமில்லை. வெள்ளம் தலைக்குமேல் ஓடிவிட்டது. இனிமேல் சாண் ஓடினால் என்ன? முழம் ஓடினால் என்ன? நம்முடைய