பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சென்னைக்குச்‌ செல்ல ஆலோசனை

201

புருஷர்கள் எல்லாரும் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களில் யாராவது ஒருவர் தப்பியிருந்தால் மற்றவர்களை ரக்ஷிக்கும் பொருட்டு அவர்களால் கூடியவரையில் முயற்சி செய்வார்கள். அவர்கள் எல்லாரும் அகப்பட்டுக்கொண்டிருப்பதால் இனி மேல் நம்மைத்தவிர நம்முடைய புருஷர்களுக்காகப் பிரயாசைப் படத்தக்கவர்கள் யார்? இனி மேல் நாம் செய்யத்தக்கது ஒன்றும் இல்லையென்று நினைத்து நாம் முயற்சி செய்யாமலிருக்கலாமா? கப்பல் உடைந்து கடலில் முழுகுகிறவர்களும் ஏதாவது ஒரு பலகையைப் பிடித்துக் கொண்டு கரையேற முயலுகிறார்கள். விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கூடத் தகுந்த வைத்தியஞ் செய்து அவர்கைளைப் பிழைப்பிக்க வகை தேடுகிறார்கள். பிராணன் போன பிற்பாடு கூட மூச்சு அடங்கியிருக்குமென்று நினைத்துப் பிரேத வைத்தியஞ் செய்கிறார்கள். அப்படிப்போல் நாமும் பிரயத்தனஞ் செய்வது அத்தியாவசியமா யிருக்கின்றது. ஆனால், காரியம் மலையாய் வளர்ந்து போயிருப்பதால் அதற்குத் தகுந்த முயற்சி செய்ய வேண்டுமே தவிர அற்பப் பிரயத்தனத்தால் அனுகூலம் உண்டாகாது. வியாதி எவ்வளவு பெரிதோ அதற்குத் தகுந்த ஔஷதங்களைப் பிரயோகிக்கவேண்டும். சென்னைப் பட்டணம் கவர்னர் அவர்கள் மகா நீதிமானென்றும் தர்மிஷ்டரென்றூங் கேள்விப்படுகிறேன். அவருக்கு நாம் மனு அனுப்பினால் கிரமப்படி உத்தரவாகக் கால தாமதம் ஆகும். உத்தரவு வருகிறதற்கு முன் நம்முடைய நாயகர்களைக் கப்பல் வழியாய்த் தீவாந்தரம் அனுப்பி விடுவார்கள். ஆகையால் இப்போதே நாம் எல்லோருமாய்க் கூடிச் சென்னைப் பட்டணம் போய்க் கவர்னர் அவர்கள் பாதத்தில் விழுந்து நம்முடைய நாயகர்களுக்காக மன்றாடுவோம். இத்தனை ஸ்திரீகளுடையவும், பாலகர்களுடையவும் பிரார்த்தனை வியர்த்தம் ஆகாதென்று நினைக்கிறேன். அந்தப்புர ஸ்திரீகளாகிய நாம் எப்படி வெளியே புறப்பட்டு அதிகாரிகளிடம் போகிறதென்று யோசிப்பீர்கள். நமக்குத்