பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தரத்தண்ணி வழக்குரைத்தல்‌

203

ஒரு மணியைக் கட்டிவிட்டால் அது வருகிற ஓசை கேட்டு, உடனே நம்முடைய வளைகளில் நுழைந்து தப்பிக்கொள்ளலாம்” என்றது. இதைக் கேட்டவுடனே எலிகளெல்லாஞ் சந்தோஷித்து ”அந்தச் சுண்டெலியைப் புகழ்ந்து கொண்டாடின. அப்போது ஒரு மூலையில் மௌனமாய் உட்கார்ந்திருந்த நரை திரையுள்ள ஒரு கிழ எலி எழுந்து சொன்ன தாவது, ”“அந்தச் சுண்டெலி மகா சதுரனே! அது சொல்லுகிற உபாயமும் நல்ல உபாயந்தான். ஆனால் நமக்குள் யார் பூனையின் கழுத்தில் மணியைக் கட்டுகிற தென்று” அந்தச் சுண்டெலியைக் கேட்டுத் தெரிவிக்கவேண்டும்” என்றது. இதைக் கேட்டவுடனே எலிகளெல்லாம் நாணம் அடைந்து ஓடிப்போய்விட்டன.

“அந்தக் கிழ எலி கேட்டதுபோல நானும் இந்த அம்மையை ஒரு கேள்வி கேட்கிறேன். “கவர்னர் நமக்குத் தரிசனங் கொடுக்காத பட்சத்தில் நாம் என்ன செய்கிறது?”” என்றாள். உடனே என் தாயார் “”கவர்னர் பேட்டி நமக்குக் கிடைக்காத பட்சத்தில் நாம் ஒரு விண்ணப்பம் எழுதி, அவர் வெளியே வரும்போது கொடுக்கலாம்”” என்றார்கள். இதைக் கேட்டவுடனே எல்லாருஞ் சரியென்று ஒப்புக்கொண்டு பிரயாணம் ஆரம்பித்தார்கள். தூய்மையான வஸ்திரங்களையும் முக்கியமான சில ஆபரணங்களையும் தரித்துக்கொண்டு அவர்களுடைய பிள்ளைகளுடனே வாகனங்களில் ஏறிக் கொண்டு பிரஸ்தானப்பட்டுச் சென்னை நகரம் போய்ச் சேர்ந்தார்கள். அந்த நகரத்திலும் மார்க்கங்களிலும் உள்ள அனேக பிரபுக்களுடைய வீட்டு ஸ்திரீகள் இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்டு அவர்களும் வாகனாரூடராய்ப் பின் தொடர்ந்தார்கள். எல்லாங் கூட ஐந்நூறு (500) வாகனங்களுக்கு மேற்பட்டுக் கவர்னர் அவர்களுடைய அரண்மனைத் தோட்டத்தின் வெளி வாசலுக்கு முன்னே வந்து, நிறைந்து நின்றன. அப்போது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருந்த கவர்னரவர்கள் வாகனங்களின் சப்தத்தைக் கேட்டு, அதிசயப்பட்டு, என்ன வென்று விசாரிக்க,