பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

பிரதாப முதலியார் சரித்திரம்

எண்ணிக்கையில்லாத ஸ்திரீகள் அழுத கண்ணூம் சிந்திய மூக்குமாய்த் தங்களுடைய குறையை விக்ஞாபனம் பண்ண வந்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, தம்முடைய சபா மண்டபத்துக்கு வரும்படி உத்தரவு கொடுத்தார். அந்தப் பிரகாரம் எல்லா ஸ்திரீகளும் வாகனத்தை விட்டு இறங்கி சபா மண்டபத்திலே பிரவேசித்தார்கள். அவர்கள் எல்லாரும் பிரபுக்கள் வீட்டு ஸ்திரீகள் என்று அவர்களுடைய முக விலாசத்தினால் கவர்னர் அவர்கள் அறிந்துகொண்டு, அவர்களையெல்லாம் ஆசனத்தில் உட்காரச் செய்து தாமும் தம்முடைய தேவியாரும் பீடத்தில் இருந்துகொண்டு “நீங்கள் உங்களுடைய துன்பத்தைத் தெரிவிக்கலாம்”” என்று இனிமையாக மொழிந்தார். வேறொருவரும் பேசத் துணியாமையினால் என் தாயார் எழுந்து நின்றுகொண்டு, அடியிற் கண்டபடி விக்ஞாபனம் செய்தார்கள்.

““இந்தத் தேசத்தை ஆளுகின்ற மகாப் பிரபுவே! சிஷ்ட பரிபாலனமும், துஷ்ட நிக்கிரகமும் உங்களுடைய வேலையானதால் அந்த வேலையை உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். ஒரு துஷ்டன் ஒரு பெண்ணைக் கொள்ள அபேக்ஷித்து அந்த ஆசை நிறைவேறாமையால் இருநூறு பெண்கள் தங்கள் நாயகர்களையும் ஆஸ்திகளையும் இழந்துபோகும்படி செய்துவிட்டான். தான் ஒரு ஸ்திரீக்குப் புருஷன் ஆகாத நிமித்தம் இருநூறு புருஷர்களுக்குத் தாரங்கள் இருந்தும் இல்லாதவர்களாகச் செய்துவிட்டான்.

பாளையப்பட்டுச் சங்கதியை விசாரிக்கும்படி தங்களால் நியமிக்கப்பட்ட விசாரணைக் கர்த்தர்கள் முன்பாக இருநூறு பெரிய பிரபுக்கள் அந்தப் பாளையதார் பக்ஷத்தில் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அவர்களுடைய சாக்ஷியத்தை நம்பாமல் அந்த விசாரணைக் கர்த்தர்களில் இருவர் அந்த இருநூறு பிரபுக்களையும் பாளையதாரையும் ஆயுசு முழுதும் தண்டித்து, அவர்-