பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவர்னர்‌ துரை விசாரணை

205

களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்யும்படி தீர்மானித்திருக்கிறார்கள். அந்த சாக்ஷிகளில் நூறு சாட்சிகள் பாளையதார் கொண்டுபோன சாட்சிகளாகவும் மற்றவர்கள் விசாரணைக் கர்த்தர்களால் நேரே வரவழைத்து விசாரிக்கப்பட்ட சாட்சிகளாகவும் இருக்கிறார்கள். இத்தனை பிரபுக்கள் கூடித் தங்களுக்குச் சம்பந்தமில்லாத பாளையதார் விஷயத்தில் தப்புப் பிரமாணம் பண்ணிப் பொய் சொல்லத் துணிவார்களா? நம்பிக்கையான ஏக சாட்சியினுடைய ருசு போதுமானதென்று சாட்சிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்க, நம்பிக்கையான கௌரவமும் உள்ள இருநூறு சாட்சிகளுடைய ருசுவை அவமதிப்பது எவ்வளவு பெரிய அநியாயம்? கலெக்டர் கச்சேரிச் சிரஸ்ததாரும் அவனுடைய துர்ப்போதனைகளுக்கு உட்பட்டிருக்கிற கலெக்டருமே பாளையதாருக்கும் எதிரிகளாயிருக்க அந்தக் கலெக்டர் வீட்டில் இரண்டு விசாரணைக் கர்த்தர்கள் வாசஞ் செய்துகொண்டு விசாரித்தது தர்மமா? கலெக்டர் வீட்டில் தங்காமல் தனியே கூடாரம் அடித்துக் கொண்டிருந்த மற்றொரு விசாரணைக் கர்த்தர் பாளையதார் பக்ஷத்தில் அபிப்பிராயப்பட்டது அவருக்குப் பெரிய அநுகூலம் அல்லவா? அந்த இருநூறு சாட்சிகளும் பொய் சொல்லியிருந்தாலுங் கூட யாவத்தராளும் ஜீவபரியந்தம் அவர்களைத் தேசாந்தரம் அனுப்பும்படியான அவ்வளவு பெரிய குற்றமாகுமா? அவர்களுடைய ஆஸ்திகளையும் பறிமுதல் செய்வது ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை செய்வதற்குச் சமானமல்லவா? விசாரணைக் கர்த்தர்கள் சொல்லுகிறபடி எங்கள் புருஷர்களேதான் குற்றஞ்செய்தார்கள்; நாங்களும் எங்கள் பிள்ளைகளும் ஆஸ்திகளை இழப்பதற்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? இப்போது நான் சொல்வதைக்கொண்டு எங்கள் புருஷர்களைப் பார்க்கிலும் ஆஸ்திகளை விசேஷமாக எண்ணி யிருக்கிறோ மென்று தாங்கள் நினைக்காமலிருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் மங்கலியப் பிக்ஷை கேட்க வந்திருக்கிறோமே அல்லாது, அஸ்-