பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

பிரதாப முதலியார் சரித்திரம்

திப் பிக்ஷை கேட்க வரவில்லை. எங்களுக்கு மங்கலியப் பிக்ஷை கிடைக்காத பட்சத்தில் எங்களுக்கு ஆஸ்திகளும் வேண்டிய தில்லை. தங்கள் சமூகத்தில் எல்லா விஷயங்களையும் நேரே விசாரித்து எங்கள் பட்சத்தில் நியாயமிருந்தால் செய்யும்படி பிரார்த்திக்கிறோமேயல்லாது எங்களுடைய அழுகைக்கும் பிரலாபத்துக்கும் இரங்கிப் பட்சபாதஞ் செய்யும்படி நாங்கள் கேட்கவில்லை. இங்கிலீஷ் கவர்ன்மெண்டு பூமண்டல முழுவதும் எவ்வளவோ கெடிபெற்றதாயிருக்கின்றது. உங்கள் உத்தியோகஸ்தனும் எங்கள் தேசத்தானுமான ஒரு பரமதுஷ்டன் உங்களுடைய கீர்த்தியையும் எங்களுடைய நன்மையும் அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறான். அவனைச் சிக்ஷித்து எங்களை ரக்ஷிக்கும்படி பிரார்த்திக்கிறோம். சகலமும் தெரிந்த மகாப்பிரபுவாகிய உங்களுக்குப் புருஷர்களை இழந்து இந்தத் தேசத்து ஸ்திரீகளுடைய நிர்ப்பாக்கியங்களை விவரிக்க வேண்டுவதில்லை. ஆகையால் எங்களுக்கு நாயகர்களையும் எங்களுடைய பிள்ளைகளுக்குத் தந்தைமார்களையும் கொடுத்தருளுங்கள்! நாங்கள் சொல்வது பொய்யென்று தாங்கள் அபிப்பிராயப்படுகிற பக்ஷத்தில் அந்தக் குற்றத்துக்காக எங்களையும் தண்டித்து எங்கள் நாயகர்களுடனே எங்களையும் தீவாந்திரத்துக்கு அனுப்பி விடுங்கள்” என்று மிருதுவாகவும், நயமாகவும், வணக்கமாகவும் விக்ஞாபித்துக்கொண்டார்கள். இதைக் கேட்கும்போது கவர்னர் அவர்களுக்கும் அவருடைய தேவியாருக்கும் கண்ணீர் பெருகி அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

பிறகு, கவர்னர், என் தாயாரையும் மற்ற ஸ்திரீகளையும் நோக்கி, ““இது பெரிய விஷயமானதால் நாம் உங்கள் ஊருக்கே வந்து விசாரித்து நியாயப்படி தீர்மானிக்கிறோம்; அது வரையில் விசாரணைக் கர்த்தர்கள் செய்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்கும்படி இப்பொழுதே உத்தரவு அனுப்புவோம்; நீங்கள் ஊருக்குப் போகலாம்”” என்று உத்தரவு கொடுத்தார். உடனே, என்