பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

பிரதாப முதலியார் சரித்திரம்

நோக்கி ““உம்முடைய புத்திரன் கலியாணத்தை இனி நீர்த் தாழ்க்காமல் உடனே நிறைவேற்ற வேண்டிய கிருஷி செய்யலாம்”” என்று உத்தரவு கொடுத்துவிட்டுச் சென்னை நகரத்துக்குப் போய்விட்டார்.

கவர்னர் போன பின்பு விடுதலையான எல்லாப் பிரபுக்களும், அவர்களுடைய குடும்பங்களும், ஆதியூரிலும் சுற்றுக் கிராமங்களில் வசிக்கிறவர்களும், சமுத்திரம் கரைபுரண்டு வருவதுபோற் கூட்டங் கூட்டமாய்த் தேவராஜப் பிள்ளை வீட்டுக்கு வந்து சந்தோஷம் கொண்டாடினார்கள். அவர்களுடைய கொண்டாட்டமே ஒரு பெரிய திருவிழாவாகவும், அந்தத் திருவிழாவுக்குத் தேவராஜப் பிள்ளை கிருகமே ஆலயமாகவும், அந்த ஆலயத்துக்கு என் தாயாரே தெய்வமாகவும் இருந்தாற்போலச் சகலரும் என் தாயாரை வாழ்த்தி வணங்கினார்கள்; அந்நிய புருஷர்களுக்கு என் தாயாருடைய தரிசனங் கிடைக்காமையினால் அவர்கள் எல்லாரும் என்னையும் என் தகப்பனாரையும் வைத்து எங்களை அபரிமிதமாகப் புகழ்ந்தார்கள். தேவராஜப் பிள்ளையும் மற்றவர்களும் செய்த ஸ்தோத்திரங்களினால் என் தாயாருக்குச் சலிப்புஞ் சங்கோசமும் உண்டாகி தேவராஜப் பிள்ளையைப் பார்த்துச் சொல்லுகிறார்கள்:—

““ஐயா! நமக்கு இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் சகலமும் கடவுளது செயலேயன்றி நம்முடைய செயல் ஒன்றுமில்லை. மேகத்திலிருந்து விழுகிற மழைத்துளிகள் இத்தனையென்றும் பூமியிலும் ஆகாயத்திலும் இருக்கிற அணுக்கள் இத்தனை யென்றும் அவர் கணக்கு வைத்திருக்கிறார்; அவருக்குச் சித்தமானால் அணுவை மலையாக்குவார்; மலையை அணுவாக்குவார்; அவருடைய கிருபா கடாக்ஷம் இல்லாமல் நமக்கு யாதொரு அனுகூலம் உண்டாகக் கூடுமா? நானும் மற்ற ஸ்திரீகளும் கடவுள் கொடுத்த வாக்கைக் கொண்டும், அவர்