பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxiv

மாகக் கொண்டு உழைத்து உயர்ந்த நேரத்தில், நம் வேதநாயகர் நீதியொன்றையே குறிக்கோளாகக் கொண்டு நிம்மதியடைந்தார்.

வேலையினின்று விலகல் :

வேதநாயகர் நேர்மையாக நீதி வழங்குவதையும் அவர் புகழ் வளர்ந்தோங்குவதையும் விரும்பாதபுல்லர் பலர் இருந்தனர். அவர்கள் அவரின் வேலைக்கு உலை வைக்கக் காலங்கருதிக் காத்திருந்தனர். அவர்களுக்கு வாய்ப்பாக நெல்சன் என்ற நீதிபதி ஒருவர் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவர் நேர்மையற்றவர், நல்லெண்ணம் இல்லாதவர். புறங்கூற்றைப் பொருட்படுத்தும் பொல்லாதவர். அவர் பொய்யர்களின் புளைந்துரைகளை நம்பி வேதநாயகரை வேலையினின்று தொலைக்க விரும்பினார். முன்னறிவிப்பு இன்றி மாயூரம் நீதிமன்றத்தைச் சோதனை செய்ய ஒருநாள் வந்தார். உடல் நலங்குன்றியிருந்த வேதநாயகர், அன்று விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்தார். நீதிபதி நெல்சனோ, அலுவலக ஆவணங்களைச் சோதனை செய்து, இல்லாத பல குற்றங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பெடுத்துக் கொண்டு, தனது தலைமையிடமாகிய கும்பகோணத்திற்குச் சென்றார். அக்குற்றச் சாட்டுகளுக்கு நேரில் வந்து விளக்கம் தருமாறு வேதநாயகருக்கு ஆணையிட்டார். அதனைப் பெற்ற வேதநாயகர், அவை குற்றமில்லையென்பதை விளகக் கடிதம் ஒன்றைத் தயாரித்து நெல்சனுக்கு அனுப்பினார். உடல்திலை காரணமாக, அவர் நேரில் செல்லவில்லை. நேரில் வந்து தம்மைக் காணாது புறக்கணித்ததைப் பெருங்குற்றமாகக் கருதிய நெல்சன், அவர் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கவையல்ல என்றும், அவரை வேலையினின்றும் விலக்கவேண்டும் என்றும் அரசியலாருக்குப் பரிந்துரை செய்தார்.

வேதநாயகர் குற்றமற்றவர் என்று அரசியலார் அறிந்திருந்தாலும், வெள்ளையனான ஒரு மேலதிகாரிக்கு மதிப்பு