பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

பிரதாப முதலியார் சரித்திரம்

கிரயமும், வண்டி வாடகையும் உடையவர்களுக்குக் கிடைக்கின்றனவா அல்லவாவென்பது கடவுளுக்கு வெளிச்சம்.

பசுவுக்குப் புலியும், கிளிக்குப் பூனையுங் காவல் வைத்ததுபோல், ஜனங்களுக்குப் பாதுகாவலாகச் சில உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய அந்நியார்ஜிதங்கள் வாசாமகோசரமா யிருக்கின்றன. ஆனால் அவர்களுடைய செய்கைகளைத் திருடர்களாகிய நாங்கள் வெளிப்படுத்தினால் எங்களைப் போல நன்றி கெட்டவர்கள் ஒருவரும் இருக்கமாட்டார்கள். ஏனென்றால் அவர்களுடைய சகாயத்தால் நாங்கள் ஜீவிக்கிறோம்; எங்களால் அவர்கள் ஜீவிக்கிறார்கள். அவர்களுக்கு நாங்களே துணை; எங்களுக்கு அவர்கள் துணை. எங்களுடைய அந்தரங்களையெல்லாம் அவர்கள் அறிவார்கள்; அவர்களுடைய அந்தரங்களையெல்லாம் நாங்கள் அறிவோம். எங்களுடைய ரகசியங்களை அவர்களும் வெளியிடார்கள்; அவர்களுடைய ரகசியங்களையும் நாங்களும் பிரசித்தஞ் செய்யோம். அவர்களுடைய கிருபை இல்லாவிட்டால் எங்களில் அநேகர் தூக்கு மரத்தில் மாண்டுபோயிருப்பார்கள். அநேகர் காவற்கூட வாசிகளாயிருப்பார்கள். நாங்கள் திருடுகிற சொத்தில் அவர்களுக்கு ஒரு பங்கு கொடுக்கிறபடியால் அவர்கள் ஒருநாளும் எங்களைக் காட்டிக் கொடார்கள். குற்றம் அற்றவர்களையும் தங்களுக்குக் கொடாதவர்களையும் அவர்கள் பிடிக்கிறதேயன்றி, எங்கள் சோலிக்கு வருகிறதில்லை. ஆகையால் அவர்களுடைய செயல்களை வெளிப்படுத்தாமல் ஆகாயத்தைப் படல் கொண்டு மறைப்பது போல் மறைத்துவிடுகிறேன்.

வஸ்திர வியாபாரிகளுடைய புரட்டுகள் சர்வ லோகப் பிரசித்த மானதால், அவைகளை நான் விவரிக்க வேண்டுவதில்லை. அவர்க ளுடைய வஸ்திரங்களின் இழைகளை எண்ணி னாலும், அவர்கள் செய்யும் குத்திரங்களை எண்ணு