பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225

பிரதாப முதலியார் சரித்திரம்

நஷ்டஞ் சம்பவிக்கக்கூடும்? அந்தச் செங்கல், வெண்கல், பசுங்கல்லைப் பார்க்கிலும் வீடு கட்ட உதவுகிற செங்கல், வெண்கல், கருங்கல் உலகத்துக்கு முக்கியம் அல்லவா? நிருபயோகமான அந்த ரத்நக் கற்களுக்கு ஜனங்களுடைய அறியாமையினால் மகிமை உண்டானதேயன்றி மற்றப்படி அல்லவே!

தட்டார்களுடைய புரட்டைச் சொல்ல எட்டாறு வாய்கள் இருந்தாலும் போதுமா? ஆயிரம் பேர் கண்ணை விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அத்தனை பெயர்களுடைய கண்களையுங் கட்டிவிட்டு, அரை வராகனெடைப் பொன்னில் கால்வராகனெடைப் பொன்னைத் திருடிக் கொண்டு செம்பைக் கலந்து விடுகிறார்கள். இரும்பு முதலிய உலோகங்களைத் தங்கம் ஆக்குகிற வாதிகளிருப்பதாக உலகத்தார் சொல்லுகிறார்கள். அவர்கள் இந்தத் தட்டார்களேயன்றி வேறொருவரையும் நாம் பிரத்தியக்ஷமாகக் கண்டதில்லை. அவர்கள் திருடித் திருடி எவ்வளவு கைபழகியிருக்கிறார்களென்றால் அவர்கள் சொந்த உபயோகத்துக்காக நகை செய்தாலுங்கூட அதிலுஞ் சிறிது பொன்னைத் திருடிக் கொள்வார்கள். நாம் மலையளவு பொன் கொடுத்தாலும் அதைக் கடுகு அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கடுகு அளவு பொன் கொடுத்தாலும் அதை மலை அளவாக நிறுத்துக் காட்டுவார்கள். அவர்கள் கையிலிருக்கிற பொன் ஆறுமாற்றாயிருந்தாலும் பத்து மாற்றாகக் காட்டுவார்கள். நம்முடைய கையிலிருக்கிற பொன் பத்து மாற்றாயிருந்தாலும் ஆறு மாற்றாக மாற்றுவார்கள். அவர்கள் கையிலிருக்கிற இரும்பையுந் தங்கமாகிக் கொடுப்பார்கள். ஆபரணஞ் செய்கிற விஷயத்தில் தட்டார்கள் செய்யும் கரவடங்களுக்குப் பயந்தே சிவன் சர்ப்பாபரணந்தரித்துக் கொண்டதாக ஒரு புலவர் பாடியிருக்கிறார்:—