பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

பிரதாப முதலியார் சரித்திரம்

ஷப்படுத்துவதாக நீ ஒப்புக்கொண்ட படியால் நீ நாளைத் தினம் அருணோதயத்துக்கு முன் அவனை நீ எப்படியாவது சந்தோஷப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் நாளைத்தினம் விடிந்த உடனே அவன் உன்னுடைய பிராணனைக் கேட்டாலும் நீ கொடுக்க வேண்டியதுதான்” என்றான். இதைக் கேட்ட உடனே இடியோசையைக் கேட்ட நாகம் போல் நடுநடுங்கி வேர்த்து விறுவிறுத்துப் போனேன்.

“”ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்”” என்பதுபோல, இந்த ஒரு வழக்கின் தீர்மானத்தைக் கொண்டு மற்ற வழக்குகள் எப்படித் தீருமென்பதை நான் அறிந்துகொண்டபடியால் இனி மேல் என் பிராணன் எனக்குச் சொந்தமல்லவென்று நிச்சயித்துக்கொண்டேன். பிராணனை இழப்பது நிச்சயமாயிருந்தாலும், அந்த விபத்தைத் தடுக்கும்பொருட்டு என்ன உபாயஞ் செய்யலாமென்று ஆலோசித்தேன். எனக்கு அண்டசாஸ்திரம் தெரியுமானதால் மறுநாள் சூரிய கிரகணமென்றும் அது பாதாள கிரகணமானதால் நெடுநேரம் வரையில் சூரியன் ஒருவருக்குந் தோன்றாதென்றும் நான் சாஸ்திரத்தினால் அறிந்துகொண்டதும் தவிர, அந்த ஊராருக்குக் கிரகணங் கணிக்கிற முறையே தெரியாதென்றும் தெரிந்துகொண்டேன். நான் அந்த நியாயாதிபதியைப் பார்த்து “நாளையத் தினம் பொழுது விடிகிறதற்குமுன் நான் சக்கிலியனைச் சந்தோஷப் படுத்த வேண்டுமென்று அநீதமாகத் தீர்மானஞ் செய்திருக்கிறீர்கள். நாளைத் தினம் பொழுது விடியாவிட்டால் என்ன செய்வீர்கள்?” என்றேன். அவன் “நாளைக்குப் பொழுது விடியாதபடி செய்ய உன்னால் ஆகுமா?” என்றான். “என்னால் ஆகுமென்பதும் ஆகாதென்பதும் நாளைத் தினம் பார்த்துக்கொள்ளலாம்” என்றேன்.அவன் கோபத்துடன் என்னை நோக்கி ““நீ பொழுது விடியாதபடி செய்தால், நீ சமர்த்தன் தான்.