பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

பிரதாப முதலியார் சரித்திரம்

விட்டேன். சக்கிலியன் பக்கத்தில் நான் தீர்மானத்தை இப்போதே மாற்றி விடுகிறேன். பொழுது விடியும்படி கிருபை செய்ய வேண்டும்” என்று பிரார்த்தித்தான். மற்ற ஜனங்களும் அந்தப் படி கிருபை செய்ய வேண்டும்” என்று என் காலில் விழுந்து கும்பிட்டார்கள். நான் ஜனங்களைப் பார்த்து “பொழுது விடிந்தவுடனே நீங்கள் குடியரசனை நீக்கி ஒரு அரசனை நியமித்துக் கொள்வதாக எனக்கு வாக்குத்தத்தஞ் செய்தால், நான் பொழுது விடியும்படி செய்கிறேன்” என்றேன். அவர்கள் அந்தப்படி வாக்குத்தத்தஞ் செய்தார்கள். கிரகணம் விடுகிற சமயம் நெருங்கி விட்டதால் இனி மேல் நான் தாமதஞ் செய்தால் என்னையல்லாமற் பொழுது விடிந்து போகுமென்று பயந்து கொண்டு நான் உடனே ஒரு வெண்பாப் பாடினேன்:—

வாடு பயிர்க்குவரு மாமழைபோல் னைந்துருகி
நாடுமக வுக்குதவு நற்றாய்போல்—நாடு
முழுதே யழுதேங்க மூடுமிரு ணீங்கப்
பொழுதே விடி வாயிப் போது.

என் பாட்டு முடிந்த உடனே கிரகணம் கொஞ்சங் கொஞ்சமாய் விலகி வெளிச்சங் காண ஆரம்பித்தது. அப்போது மேகக்கூட்டங்கள் சூரியனை மறைத்துக் கொண்டபடியால் கிரகணம் விடுகிற சமாச்சாரம் ஜனங்களுக்குத் தெரியாது. கிரகணம் முழுவதும் நீங்கின உடனே சூரியன் ஜகஜ்ஜோதியாய்ப் பிரகாசிக்க ஆரம்பித்தது. உடனே ஜனங்களுக்கு உண்டான சந்தோஷத்தையும் அவர்கள் எனக்குச் செய்த ஸ்தோத்திரங்களையும் நான் விவரிக்கவும் வேண்டுமா? அவர்கள் என்னை மட்டுமிதமில்லாமற் புகழ்ந்த பிற்பாடு என்னைப் பார்த்து “சுவாமி! உங்களுடைய உத்தரவுப்படி நாங்கள் இன்றையத் தினமே ஒரு அரசனைத் தெரிந்து கொள்ளப் போகிறோம். நாங்கள் தேவாலயத்துக்குப் போய்ப் பிரார்த்தனை செய்து கொண்டு, பட்டத்து யானையைச் சிங்காரித்து அதன் கையிலே பூமாலையைக் கொடுத்து அனுப்புவோம்.