பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ ஆண் வேஷம் பூண்டது

255

அந்த யானை யார் கழுத்திலே பூமாலையைப் போட்டுத் தன் முதுகிலே தூக்கி வைத்துக் கொள்ளுகிறதோ அவரை அரசனாக நாங்கள் அங்கீகரித்துக்கொள்வது வழக்கமாயிருக்கிறது. ஆகையால் அந்தப்படி செய்ய உத்தரவு கொடுக்க வேண்டும்” என்று சொல்லி என்னிடத்தில் செலவு பெற்றுக்கொண்டு போய்விட்டார்கள்.




36-ஆம் அதிகாரம்
குடி யரசை நீக்கி, முடி யரசை நியமித்தல்
ஞானாம்பாள் ஆண் வேஷம் பூண்டு,
அரசாண்டது


சூரியனைப் பிடித்த கிரகணம் நீங்கியும், என்னைப் பிடித்த பீடை நீங்காமையினால், நான் காவற் கூடத்திலே யிருந்தேன். அரசனை நியமிக்கிறதற் காக போன ஜனங்கள், உடனே தேவாலயத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தபிறகு, பட்டத்து யானை கையிலே பூமாலையைக் கொடுத்து விட்டதாகவும், அது ஒரு மகாபுருஷன் கழுத்திலே மாலையைப் போட்டுத் தன் முதுகின்மேலே தூக்கி வைத்துக் கொண்டதாகவும் அந்த மகா புருஷனை ஜனங்கள் அரசனாகத் தெரிந்துகொண்டதாகவும் அன்றையத் தினம் சாயங்காலத்தில் நான் கேள்விப்பட்டுத் திருப்தி அடைந்தேன். அந்த அரசனுடைய ஊர், பெயர், ஜாதி முதலிய பூர்வோத்தமங்களும் குணாகுணங்களும் ஒருவருக்குந் தெரியவில்லை. ஆனால் அவருடைய அதிரூப சௌந்தரியத்தைப் பற்றிப் புகழாதவர்கள் ஒருவருமில்லை. அன்றையத் தினம் சூரியன் அஸ்தமித்து இருட்டின பிறகு சில சேவகர்கள் ஓடி வந்து ““புதிதாக வந்திருந்த அரசர் அநேக வழக்குகள் விசாரணை-