பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ நீதி விசாரணை

257

வெண்கலப் பானையைச் சூதாட்டிகளுக்குக் காட்டி “அதில் என்ன இருக்கிறது பாருங்கள்!” என்றார்.அவர்கள் உள்ளே பார்வையிட்டு “சும்மா இருக்கிறது” என்றார்கள். உடனே அரசர் அவர்களைப் பார்த்து “அந்தச் சும்மாவை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று தீர்மானித்தார்.

மூன்றாவது ஒற்றைக்கண் குருடன் வந்து “இவன் தன்னுடைய குருட்டுக் கண்ணைக் கொடுத்துவிட்டு என்னுடைய நல்ல கண்ணை இரவல் வாங்கிக் கொண்டு போனவன், மறுபடியுங் கொடாததினால் என்னுடைய நல்ல கண்ணை வாங்கிக் கொடுக்கவேண்டும்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து “நீ பிரதிவாதியினுடைய குருட்டுக் கண்ணை முந்தி வாங்கிக்கொண்டதாக ஒப்புக்கொள்ளுகிற படியால் அந்தக் கண்ணைத் தோண்டி அவருக்குக் கொடுத்துவிடு. அவருடைய நல்ல கண்ணைப் பற்றி பிற்பாடு தீர்மானஞ் செய்கிறோம்” என்றார். அவன் “குருட்டுக்கண்ணை எப்படித் தோண்டுவேன்?” என்றான். “அது உன்னாற் கூடாத பக்ஷத்தில் நாம் தோண்டும்படிச் செய்விக்கிறோம்” என்று ஒரு குறடு கொண்டுவரும்படி அரசர் உத்தரவு கொடுத்தார். இதைக் கேட்ட உடனே அந்த ஏகாக்ஷி “என்னைச் சும்மா விட்டாற் போதும்; எனக்கு நல்ல கண் வேண்டாம்! வேண்டாம்!” என்று கதறிக்கொண்டு ஓடினான்.

நொண்டிக்காலன் வழக்கிலும் நொண்டிக்காலை முந்தி எனக்கு வெட்டிக்கொடுக்கும்படித் தீர்மானஞ் செய்யப்பட்டது. அவனும் “எனக்கு நொண்டிக்காலே போதும்! நல்ல கால் வேண்டாம்! வேண்டாம்!” என்று சொல்லி ஓடினான்.

பாகசாலைக்காரன் அவனுடைய வழக்கைச் சொல்லிக்கொண்ட உடனே அரசர் சில வெள்ளி நாணயங்களை எடுத்துக் கலகலவென்று சப்திக்கும்படியாக ஒரு வெண்-

17