பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

பிரதாப முதலியார் சரித்திரம்

கலத் தட்டிற் கொட்டி பாகசாலைக் காரனைப் பார்த்து “அந்தப் பணங்களின் ஓசையைக் கேட்டாயா?” என்றார். அவன் “கேட்டேன்” என்றான். உடனே அரசர் அவனைப் பார்த்து “பிரதிவாதி உன்னுடைய சாதத்தின் வாசனையை மூக்கினால் கிரகித்ததற்கும் அதன் கிரயப் பணத்தின் சப்தத்தை நீ காதினாற் கேட்டதற்குஞ் சரியாய்ப் போய் விட்டது. ஆகையால் நீ வீட்டுக்குப் போகலாம்” என்று உத்தரவு கொடுத்தார்.

பிறகு தாசியானவள் வந்து, பிரதிவாதி தன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்ததாகத் தெரிவித்தாள். உடனே அரசர் அவளைப் பார்த்து “பிரதிவாதி உன்னை நிழலினால் ஆலிங்கனஞ் செய்தபடியால் உனக்குப் பணம் கொடுக்கப்படும்” என்று சொல்லி அந்த தாசியை வெளிச்சத்தில் நிறுத்தி அவள் மேலே பண நிழல் படும்படி பணத்தை மேலே தூக்கிக் காட்டும்படி திட்டஞ் செய்தார். மலை போல வந்த துன்பமெல்லாம் பனிபோல் நீங்கினது போல, என் மேலே வந்த துர்வழக்குகளெல்லாம் எனக்கு அநுகூலமாக முடிந்தபடியால் நான் கரைகாணாத களிப்புக் கடலில் மூழ்கினேன்.

என்னுடைய வழக்குகள் முடிந்த பிற்பாடு அரசர் ஜனங்களை நோக்கிச் சொல்லுகிறார்:- “இப்போது நாம் விசாரணை செய்த துர்வழக்குகளினால் இந்த ஊர் எவ்வளவு கெட்ட ஸ்திதிக்கு வந்திருக்கிறதென்பதை நாம் கரதலாமலகம் போற் கண்டுகொண்டோம். இப்படிப்பட்ட வழக்குகளை நாம் எந்த ஊரிலும் கேள்விப்பட்டதில்லை. இப்படிப்பட்ட வழக்குகளைக் கொண்டுவருகிறவர்கள் நம்மையும் நம்முடைய நியாயாசனத்தையும் அவமானப்படுத்துகிற படியால் அவர்களைத் தண்டிக்க வேண்டியது நம்முடைய கடமையாயிருக்கின்றது. ஆயினும் நமக்குப் பட்டாபிஷேகமான இந்த மங்கள தினத்தில் ஒருவரையுந் தண்டிக்க நமக்கு இஷ்டமில்லாதபடியால் அந்தத் துர்வியாஜ்ஜியக்காரர்களை இந்தத் தடவை