பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பொய்‌ வழக்காளிகளுக்கு எச்சரிப்பு

259

மன்னித்திருக்கிறோம். இனிமேல் இத் தன்மையான வழக்குகளை யாராவது கொண்டு வருவார்களானால் அவர்கள் தப்பாமல் தண்டிக்கப்படுவார்கள். ஸ்தாவர ஜங்கமங்களை அநியாயமாக இழந்துபோனவர்களும் அல்லது வேறுவிதமான துன்பத்தை அடைந்தவர்களும் நம்மிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டால் நாம் கிரமப்படி விசாரணை செய்து நிஷ்பக்ஷபாதமாகவும் நிர்த்தாட்சண்ணியமாகவுந் தீர்மானஞ்செய்யச் சித்தமாயிருக்கிறோம். இந்த ஊரிலே குடியரசு நிலைத்த பிற்பாடு அக்கிரமம் நிலைபெற்று தர்மங் குடியோடிப் போய்விட்டதாகத் தெரியவருகிறது. நம்முடய காலத்தில் தர்மந் தலையெடுக்கும்; அநியாயம் அதோகதியாகப் போகும். இதை நீங்கள் சீக்கிரத்தில் காண்பீர்கள்!” என்றார்.

இந்த உபந்நியாசத்தைக் கேட்ட உடனே, சர்க்கரைப் பந்தலிலே தேன் மாரி பொழிந்ததுபோல் சாதுக்களெல்லாரும் பரம சந்தோஷம் அடைந்தார்கள். துஷ்டர்களெல்லாரும் கருடனைக் கண்ட பாம்புபோல அடங்கினார்கள். நான் இது தான் சமயமென்று நினைத்து, என்னுடைய வஸ்திராபரணங்களைக் கவர்ந்து கொண்ட காவல்வீரர்களை நோக்கி, “நீங்கள் செய்த அக்கிரமங்களை நான் அரசனுக்குத் தெரிவிக்கப் போகிறேன்” என்று சொல்லி என் காலை எட்டி வைத்தேன். அவர்கள் உடனே என்னை வழிமறித்துக் கொண்டு “சுவாமி! உங்களுடைய சொத்துக்களைக் கொடுத்துவிடுகிறோம். எங்களுடைய செய்கையை அரசனுக்குத் தெரிவிக்க வேண்டாம்!” என்று பதினாறு பல்லையுங் காட்டிக் கெஞ்சினார்கள். நான் அரசனிடத்திற் போகாமல் திரும்பி, என்னுடைய உடைமைகளைக் கொடுக்கும்படிக் கேட்டேன். அவர்கள் என்னைப் பார்த்து, “சுவாமி! இந்த ஆடை ஆபரணங்கள் உங்களுக்கு ஒரு விஷயமா? பொழுது விடிவதும் விடியாமற் போவதுமே, உங்களுடைய ஸ்வாதீனத்தில் இருக்கும்போது உங்களுடைய சக்திக்கு மேற்பட்டது யாது? நீங்கள் வானத்தை வில்லாக