பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

பிரதாப முதலியார் சரித்திரம்

வளைப்பீர்கள்! மணலைக் கயிறாகத் திரிப்பீர்கள்!! நீங்கள் ஆகாயத்தை ஆடையாக்கி அணிந்துகொள்வீர்கள். மண்ணையும் கல்லையும் ஆபரணமாக்கிப் பூண்டுக் கொள்வீர்கள். எங்களுக்குக் கொடுத்துவிட்ட ஆடையாபரணங்களை மறுபடியும் கேட்கலாமா?” என்றார்கள். நான் அவர்களைப் பார்த்து, “நான் அவைகளை உங்களுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்திருந்தால் நான் மறுபடியும் கேட்கமாட்டேன். அவைகளை நீங்களே துராக்கிருதமாய்க் கவர்ந்துகொண்ட படியால் மறுபடியும் கொடுக்க வேண்டும்” என்றேன். அவர்கள் என் சொத்துக்களைக் கொண்டுவருவதாகச் சொல்லி வெளியே போய் சற்று நேரத்திற்குப் பின்பு ஒரு மூட்டையைக் கொண்டுவந்து கொடுத்து என்னுடைய உடைமைகளெல்லாம் அதற்குள் இருப்பதாகச் சொல்லிப் போய்விட்டார்கள். அவர்களை நான் பயமுறுத்தி மறுபடியும் என்னுடய சொத்துக்களை வாங்கிக்கொண்ட விஷயத்தில் என்னுடைய சாமர்த்தியத்தை நானே மெச்சிக்கொண்டேன். நடு சாமத்தில் ராஜசபை கலைந்து, அரசன் முதலிய எல்லாரும் அவரவர்களுடைய கிருகங்களுக்குப் போய்விட்டார்கள். வாய் கொழுப்புச் சீலையால் வடிந்தது போல் அந்த ஊராரிடத்தில் வாய் கொடுத்தால் பாடாவதியாய் வருகிறபடியால், இனி மேல் ஒருவரிடத்திலும் வாயைத் திறக்கிறதில்லை யென்றும், பொழுது விடிகிற வரையில் எங்கேயாவது படுத்திருந்து, விடிந்த உடனே அந்த ஊரை விட்டுப் போய்விடுகிறதென்றும் நிச்சயித்துக்கொண்டேன். நான் கொலு மண்டபத்தை விட்டு வெளியே போவதற்குமுன் வஸ்திரத்தைத் தரித்துக்கொள்ளலாமென்று நினைத்து, அந்தச் சேவகர்கள் கொடுத்த மூட்டையை அவிழ்த்தேன். வெங்காயம் உரிக்க உரிக்கத் தோலாயிருப்பது போல், அந்த மூட்டை அவிழ்க்க அவிழ்க்க பழங்கந்தையா யிருந்ததேயல்லாமல் என்னுடைய ஆடைகளையும் காணேன். ஆபரணங்களையும் காணேன். எனக்காக