பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ சந்திப்பு

261

இத்தனை கந்தைகளை அந்தப் படுபாவிகள், எப்படிப் பொறுக்கிச் சேர்த்து வைத்திருந்தார்களென்பது பெரிய ஆச்சரியமா யிருந்தது. நமன் வாயில் அகப்பட்ட உயிர் திரும்பினாலும், அவர்களிடத்தில் அகப்பட்ட சொத்து மீளாதென்ற உண்மை அப்போது தான் எனக்குத் தெரிந்தது.

நான் கொலுமண்டபத்தை விட்டு வெளியே போக எத்தனமாயிருக்கையில், ஒரு சேவகன் ஓடி வந்து என்னைப் பார்த்து, “ஐயா! இந்த ஊர், துஷ்டர்களுக்கு வாசஸ்தலமாயிருப்பதால், இந்த அர்த்த ராத்திரியில் நீங்கள் வெளியே போகாமல், கொலு மண்டபத்திலே படுத்துக்கொள்ளும்படி மகராஜா உத்தரவு செய்தார்கள்” என்று சொல்லிப் போய் விட்டான். நான் அரசனுடைய ஜீவகாருண்யத்தை வியந்துகொண்டு, அவர் தீர்க்காயுஷாயிருக்க வேண்டுமென்று கடவுளைப் பிரார்த்தித்த பிறகு, அந்த மண்டபத்தில் ஒரு மூலையில் பூமியே புஷ்பமெத்தையாகவும் என் கையைத் தலையணயாகவும் வைத்துக் கொண்டு கௌபீனத்துடன் படுத்துக்கொண்டேன். படுத்தவுடனே அந்த மண்டபத்தில் புத்திர பௌத்திர ப்ரபௌத்திரர்களுடன் தலைமுறை தலைமுறையாய் வாழ்ந்துகொண்டிருந்த மூட்டுப் பூச்சிகள் வந்து என் மேல் ஏறி கவசம் போட்டதுபோல் மொய்த்துக்கொண்டன. அவைகள் உபத்திரவத்தினால் எனக்கு நல்ல நித்திரையில்லாமற் பாதி நித்திரையாய்க் கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தேன்.

படுத்துச் சற்று நேரத்திற்குப் பின்பு அந்தக் கொலுமண்டபத்திற்கும் ராஜமாளிகைக்கும் மத்தியிலிருந்த வாசற்படிக் கதவு படீரென்று திறந்த சப்தம் கேட்டு என்ன ஆபத்து வருமோ என்று பயந்துகொண்டு என்னுடைய இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டேன். சற்று நேரத்திற்குப் பின்பு யாவரோ வந்து என்னை மிருதுவாகத் தட்டினார்கள். நான் முழுக்கண்ணையுந் திறவாமல்