பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

பிரதாப முதலியார் சரித்திரம்

பாதிக் கண்ணைத் திறந்து பார்த்தேன். ஞானாம்பாள் வந்து நிற்பது போலத் தோன்றிற்று. இந்த இடத்துக்கு ஞானாம்பாள் எப்படி வரக்கூடும்? நாம் கனவு காண்கிறோமென்று நினைத்து மறுபடியும் கண்ணை மூடிக்கொண்டேன். அவள் தன்னுடைய இரண்டு கைகளாலும் என்னைப் பிடித்துத் தூக்கி உட்காரவைத்து “ஐயோ! அத்தான்! இந்தப் பஞ்சைக் கோலத்துடன் தேவரீரைப் பார்க்க நான் என்ன பாவஞ் செய்தேன்?” என்று சொல்லி அழுதாள். நான் கண்ணை விழித்து “நீ யார்?” என்றேன். அவள் “என்னை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட்டீர்களா? நான் ஞானாம்பாள் அல்லவா?” என்றாள். நான் அவளைப் பார்த்து “நான் தூங்குகிறேனென்றும் விழித்திருக்கிறேனென்றும் நிச்சயந் தெரியவில்லை. அந்த நிச்சயந் தெரியும் பொருட்டு உன்னுடைய நகத்தினாலே என்னைக் கிள்ளு!” என்றேன். அவளை நான் பூரண பக்ஷத்துடன் அங்கீகரிக்கவில்லை யென்கிற கோபத்தினாலும், என்னுடைய நித்திரை மயக்கத்தைத் தெளிவிக்கவேண்டும் என்கிற எண்ணத்தினாலும் அவள் என்னைப் பலமாகக் கிள்ளி எனக்கு முத்தம் கொடுப்பது போல என்னை வெடுக்கென்று பல்லாலே கடித்தாள். உடனே நான் திடுக்கென்று விழித்துக் கொண்டேன். எனக்கு நித்திரை மயக்கந் தெளிந்து அவள் ஞானாம்பாள் என்று நிச்சயந் தெரிந்த உடனே அவளைக் கட்டிக்கொண்டு சிறு பிள்ளை போல நெடுநேரங் கதறினேன். அவளும் என்னுடன் புலம்பின பிறகு என்னைப் பார்த்து “உங்களை இந்த கோலத்தோடு நான் ஒரு நாளும் பார்த்ததில்லை. உங்களைப் பார்க்கப் பார்க்க என் வயிறு பற்றி எரிகின்றது. நீங்கள் ஊரை விட்டுப் புறப்பட்டது முதல் நடந்த சங்கதிகளை யெல்லாம் தெரிவிக்க வேண்டும்” என்றாள்.

நான் வேட்டை பார்க்கப் புறப்பட்டது முதல் நடந்த ஒவ்வொரு விஷயத்தையுந் தெரிவித்ததுந் தவிர, கடைசியாகப் புது அரசன் என்னை விடுதலை செய்த விவரத்தையும்