பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ தன்‌ வரலாறு கூறல்‌

263

சொல்லி ““அந்த அரசருக்குக் கடவுள் பூரண ஆயுசைக் கொடுக்க வேண்டும்; அவராலே தான் உன்னை நான் இப்பொழுது காணும்படியான பாக்கியம் கிடைத்தது”” என்றேன். ஞானாம்பாள் என்னைப் பார்த்து “உங்களை விடுதலை செய்த புது அரசன் நான் தான்” என்றாள். இதைக் கேட்ட உடனே நான் ஆச்சரியங் கொண்டு பிரமித்து நான் மறுபடியும் தூங்குகிறேனோ விழித்திருக்கிறேனோ வென்று என் கண்ணைத் தடவிப் பார்க்க ஆரம்பித்தேன். அவள் என்னைப் பார்த்து ““உங்களுடைய புத்தியைச் சிதற விட வேண்டாம். நான் சொல்வது வாஸ்தவந்தான்; எல்லா காரியங்களையும் சவிஸ்தாரமாகச் சொல்லுகிறேன்; வாருங்கள்”” என்று சொல்லி என் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அரண்மனைக்குப் போனாள்.




37-ஆம் அதிகாரம்
ஞானாம்பாள் தன்னுடைய வரலாறுகளைத்
தெரிவித்தல்

நானும் ஞானாம்பாளும் கொலுமண்டபம், ஆஸ்தான மண்டபம், சித்திர மண்டபம், சிங்கார மண்டபங்களெல்லாம் கடந்து ஏகாந்த மண்டபத்திற் போய்ச் சேர்ந்தோம். இராத்திரியென்பதே தெரியாமற் பட்டப் பகலென்று சொல்லும்படியாக அநேக தீபகோடிகள் அந்த மண்டபங்களிற் பிரகாசித்தன. ஞானாம்பாள் என்னை ஒரு ஆசனத்திலிருத்தி அவளுடைய வரலாறுகளைச் சொல்லத் தொடங்கினாள்.