பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

278

பிரதாப முதலியார் சரித்திரம்

ஒருவனாகச் சஞ்சரித்து அவர்களுடைய குணாகுணங்களையும் ஆசாரக் கிரமங்களையும் அறிந்துகொள்ள வேண்டும். அரசன் காக்ஷிக்கெளியனாய் மதுர பாஷியாய்ச் சகலருடைய குறைகளையுங் கேட்டு உடனே பரிகாரஞ் செய்யவேண்டும். அரசன் எல்லாருக்குங் காது கொடுக்க வேண்டுமே தவிர தகுந்த விசாரணையில்லாமல் எல்லாருடைய வார்த்தைகளையும் நம்பவொண்ணாது.

கடவுளைப் போல அரசனுக்குச் சர்வலோக சஞ்சாரமும் சர்வசக்தியும் இல்லாதபடியால், உத்தியோகஸ்தர்கள் மூலமாகவே அநேக காரியங்களையும் அரசன் நடத்தவேண்டியதாயிருக்கும். அந்த உத்தியோகஸ்தர்கள் ராஜப்பிரதிநிதிகளாகையால், அவர்கள் சர்வோத்தமர்களாக இருக்கவேண்டும். அப்படி யில்லாவிட்டால் அரசனைப் பாவமும் பழியும் தொடருமானதால், அரசன் திறமையும் சன்மார்க்கமும் உள்ளவர்களைத் தேடி அவர்களுக்கே தகுந்த உத்தியோகங்களைக் கொடுக்கவேண்டும். ஒருவன் வேலை பார்க்குந் திறமையில் அதி மேதாவியா யிருந்தாலும், நற்குண சூனியனாயிருப்பானானால் அவனுக்கு அரசன் அற்ப உத்தியோகமுங் கொடுக்கக் கூடாது. அரசன் யோக்கியர்களையே நாடுகிறானென்று யாவருக்குந் தெரிந்தால் உலகத்தில் யோக்கியதை அதிகரிக்கவும் அயோக்கியதை வலசை வாங்கிப் போகவும் இடமாகுமல்லவா? சில ராஜாங்கத்தார் யோக்கியதையைக் குறித்து யாதொரு பரீக்ஷையுஞ் செய்யாமல் கல்வி பரீக்ஷை மட்டுஞ் செய்துகொண்டு, அதில் யார் தேர்ந்து வருகிறார்களோ அவர்களுக்கே எந்த உத்தியோகங்களையும் கொடுக்கிறார்கள். நாம் வித்தியா பரீக்ஷையோடே யோக்கியதா பரீக்ஷையுஞ் செய்யாமல் ஒருவருக்கும் உத்தியோகங் கொடுக்கக் கூடாது. இங்கிலீஷ் துரைத்தனத்தாரால் நியமிக்கப்பட்டிருக்கிற பாடசாலைகளில் ஈசுர நிச்சயம் சன்மார்க்கம் முதலிய ஆத்மார்த்தமான விஷ-