பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxi

கருணை காட்டி வழி நடத்தக் காத்திருந்த இறை இயேசுவையும், அவரை ஈன்ற அன்னை, கன்னி மரியையும் பெரிதும் நினைந்தார். நீதிபதியாக வேலை பார்த்தபோது, இறைவனை எண்ணிப் போற்ற நேரம் போதாக் குறையை நினைத்து, “அப்பா இதென்ன அதிகாரம் ஐயோ! எப்போதும் பக்தி செய்ய இல்லையே நேரம்” என்று நெஞ்சுருகிப் பாடியவருக்கு இப்போது நிறைய நேரம் கிடைத்தது.

ஆகவே, இறைவனின் திருவருளை நினைந்து, “திருவருள் மாலை“ “திருவருள் அந்தாதி“ என்ற செய்யுள் நூல்களையும், தேவ அன்னையின் அருளைப் போற்றித் “தேவ மாதா அந்தாதி, என்ற செய்யுள் நூலையும் யாத்து, 1873 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

ஒருமுறை தம் தொழில் தொடர்பாகச் சென்னை சென்றிருந்த போது, சென்னையிலிருந்து 12கல் தொலைவிலிருந்த பெரியபாளையம் சென்று, அவ்வூர் பெரியநாயகி மாதா பேரில் ஒரு பதிகம்-10 பாக்கள் பாடினார். அதனையும் அத்தொகுப்பில் சேர்த்து வெளியிட்டார்.

பின்னர் தேவனைத் தோத்தரிக்கும் மாலையாக, “தேவ தோத்திர மாலை“ என்ற செய்யுள் நூலையும் எழுதி, 1889ஆம் ஆண்டில் வெளியிட்டார். இவை இறையன்பில் ஈடுபட்ட அவரது இதயத்தின் எதிரொலிகளாக இலங்குகின்றன. இவற்றைப் படிப்பவர்க்கும் இதே உணர்வு இன்றும் ஏற்படும்.

தனிப் பாடல்கள் :

இவை தவிர, வேதநாயகர் தன் நண்பர்களுடன் உரையாடியபோதும், அவர்களுக்குக் கடிதங்கள் - சீட்டுக்கவிகள்- எழுதிய போதும், திருமண நிகழ்ச்சிகளின் போதும், பல்வேறு பிற நிகழ்ச்சிகளின் போதும், பாடிய பாடல்கள் கணக்கற்றவை. அவற்றைத் தொகுத்து வெளியிட்டால். அவை ஒரு நூலாகக் கூடும்.