பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxii

பொதுநலத் தொண்டு:

நீதிபதிப் பொறுப்பிலிருந்து விலகிய வேதநாயகர், ‘நிம்மதி’யாக வீட்டிலிருக்கவில்லை. தன்னால் இயன்ற அளவு போதுநலத் தொண்டும் செய்தார். மாயூரத்தைச் சேர்த்த பெரியோரி பலர், அவரை அந்நகர் மன்றத்தின் தலைவராக்கினர். அவரும் அவர்களின் அன்பைத் தட்ட முடியாமல் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். தனது பதவிக் காலத்தில் சாலைகள் அமைத்தல், கல்விச் சாலைகள் அமைத்தல், குடிநீர் வசதியளித்தல், துப்புரவு, சுகாதாரம் பெருகச் செய்தல் முதலிய பல்வேறு துறைகளிலும் பாராட்டத்தக்க பணிகளைச் செய்து, “பொது நலத்தொண்டு செய்வது எப்படி?” என்று பிறருக்கு அறிவுறுத்தினார்.

வறுமைக் காலத்துத் தொண்டு:

1876ஆம் ஆண்டு முதல் மூன்றாண்டுகள் மாயூரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. முதல் ஆண்டில் வறட்சியும், இரண்டாம் ஆண்டில் வெள்ளமும், மூன்றாம் ஆண்டில் விட்டில் பூச்சிகளும் இப்பெரும் பஞ்சத்திற்குக் காரணமாயின. இப்பஞ்ச காலத்தில் மாண்டோர் எண்ணிக்கை எண்ணி மாளாது. மனித உயிர்கள் பட்ட பாட்டைக் கண்டு மனம் பதறினார் வேதநாயகர். சோற்று வளமுடைய சோழநாட்டில், சோறில்லாது மக்கள் வருந்தும் நிலைமை நீக்க நினைந்தார்

பெரும் நிலக்கிழார்கள். பெருஞ் செல்வர்கள், சைவ மடத்துத்தலைவர்கள் ஆகியோர் அளித்த உதவிகளுடன் தன் சேமிப்பையும் சேர்த்து, மாயூரத்திலும், சுற்றுப்புறச்சிற்றூர்களிலும் கஞ்சித் தொட்டிகள் வைத்து நடத்தினார். கத்தோலிக்க சமய உலகத் தலைவராகிய பாப்பரசர் மூலமாக ஐரோப்பிய நாட்டு உதவியையும் பெற்று உதவினார். அம்மூன்றாண்டுகளும் முழு நேரப் பணியாகச் செய்தார். இவரது இத்தகு தொண்டுகளைக் கண்டு