பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxiii

வியந்து, “பரனைப் பாடிய வாயால் ஒரு நரனைப் பாடமாட்டேன்” என்று நோன்பு கொண்டிருந்த முடிகொண்டான் கோபாலகிருட்டின பாரதியார், விதிவிலக்காக, “நீயே புருஷ மேரு“ என்று தொடங்கும் பாடல்-கீர்த்தனை-ஒன்றைப் பாடிப் பாராட்டினார். இக்காலத்தில், பஞ்சத்திலிருந்து மக்களைக் காக்குமாறு இறைவனை வேண்டி வேதநாயகர் பாடிய, “பஞ்சம் தீர் ஐயா, உம்மையன்றித் தஞ்சம் ஆர் ஐயா“ என்று தொடங்கும் பாடல் போன்ற பாடல்களும், பிற தனிப் பாடல்களும் தனிச் சிறப்புடையவை.

நல்லறிஞர் நட்பு :

வேதநாயகர் வாழ்ந்தகாலத்தில், தமிழகத்தில் வாழ்ந்த நல்லறிஞர் பலருடனும் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார். அவருள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர், திருசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையாவார். இவரது நட்பை இவர் வாழ்ந்த காலத்து மட்டுமன்றி இவரது இறப்பிற்குப் பின்னும் நம் வேதநாயகர் போற்றி வந்தது புதுமையேயாகும்.

வேதநாயகர் மொழி பெயர்ப்பாளராக விளங்கிய காலத்தில், திருச்சிராப்பள்ளியில் மகாவித்துவான் அவர்கள் மிகச் சிறந்த தமிழ்ப் புலவராய் விளங்கினார். தமிழ் இலக்கண இலக்கியங்களில் வல்லவராய் விளங்கியதோடு, கவி பாடும் திறமையும் பெற்றுத் திகழ்ந்தார். இவரது நட்பு நம் வேதநாயகருக்கு எதிர்பாரா வகையில் கிட்டியது. பின்னர் அது வளர்பிறை போல் வளர்ந்து முழுமை பெற்றது.

வேதநாயகர் திருச்சியில் வாழ்ந்த காலத்து இருவரும் அடிக்கடி கண்டு அளவளாவி மகிழ்ந்தனர். தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். வேதநாயகர் தரங்கம்பாடியில் இருந்த குறுகிய காலத்து மட்டுமே இவ்விருவரும் சிறிது பிரிந்து வாழ நேர்ந்தது. ஆனால் வேதநாயகர் சீர்காழிக்கு வந்தபோது, மகா வித்துவானைச் சீர்காழிக்கு .