பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xxxiv

வந்துவிடுமாறு அழைத்தார். அவரும் நண்பரின் அழைப்பையேற்றுச் சீர்காழிக்கு வந்து சேர்ந்தார். “பிரித்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?” என்பது போல, அவ்விருவரும் அங்கு ஒருங்கு ஆற்றிய பணிகள் உயர்வானவையே!

மகா வித்துவான் அவர்கள் அங்கிருந்தபோது, சீர்காழி இறைவன் மீது ”சீர்காழிக் கோவை” என்ற சிறந்த ஒரு நூலைப் பாடினார். அதனை அக்கோயிலிலே கூடிய அவையில் அரங்கேற்றினார். அவ்வரங்கேற்றத்திற்கு நம் வேதநாயகரே தலைமையேற்று, அது சிறப்புற நிகழ்வுறச் செய்ததோடு. அந்நூலைப் போற்றிச் சாற்றுக் கவிகள் பாடினார். மகாவித்துவான் அவர்கள், வேதநாயகர் மீதும் ஒரு கோவை பாடினார். அவரது பிறப்பிடத்தின் பெயரால், அதற்குக் ”குளத்தூர்க் கோவை” எனப் பெயரிட்டார். அகப் பொருள் துறை இலக்கணங்கள் அமைய இயற்றப்பட்ட 438செய்யுட்கள்கொண்ட அந்நூலில், அவர் வேதநாயகரின் விழுமிய புகழை விளம்பியிருக்கிறார்.

பின்னர், மகா வித்துவான் அவர்கள், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு அருகில் இருக்கக் கருதி மாயூரத்திற்குச் சென்றபோது அவரைப் பிரிய நேர்ந்தமைக்கு வேதநாயகர் வருந்தினார். தனக்கு மாயூரத்திற்கு மாற்றம் கிடைத்த போது மகிழ்ந்தார். அவரோடு உறவாடியும் உரையாடியும் உவகை கொண்டார். 1-2-1876 இல் மகாவித்வான் அவர்கள் காலமானபோது ஆராத் துயரில் ஆழ்ந்தார். அவரது குடும்பத்தாருக்கு தன்னால் இயன்ற வகைகளில் எல்லாம் உதவினார். மாயூரம் துணை ஆணையரிடம் பரிந்துரைத்து, அவரது மகனுக்குக் கணக்கர் வேலை பெற்றுத் தந்தமை அவற்றுள் குறிப்பிடத் தக்கதாகும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புலவர்களிலே சிறப்பிடம் பெறுபவர், கிறிஸ்தவக் கம்பர் என்று போற்றப் பெறும் ஹென்றி ஆல்பிரட் கிருட்டிணப் பிள்ளையாவார். பாளையங்கோட்டைக் கல்லூரியிலே தமிழாசிரியப் பணியாற்றிய அவர், தாம் யாத்த ”இரட்சணிய யாத்திரி-