பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

290

பிரதாப முதலியார் சரித்திரம்

கும்படி சட்டம் ஏற்படுத்தினோம். அந்தத் துர் வழக்குக்காரன் அப்பீல் செய்யா விட்டாலும், அல்லது அப்பீல் செய்து தோற்றுப் போனாலும், அவனிடத்தில் அந்தத் தொகையை வசூல் செய்கிறதென்று நிபந்தனை செய்தோம்.

இலிகித ரூபமாகப் பிறக்கிற சகல பத்திரங்களையும், ஆதரவுகளையும் பதியும்படி, ஊருக்கு ஒரு உத்தியோகசாலையை உண்டு பண்ணி, தகந்த உத்தியோகஸ்தர்களை நியமித்தோம். அவர்கள் ஒவ்வொரு ஆதரவும் வாஸ்தவமென்றும், உபய வாதிக ளுடைய பூரண சம்மதத்துடன் பிறந்ததா வென்றும், நியாயத்துக்கும் தர்மத்துக்கும் ஒத்திருக்கிறதா வென்றும், பூரணமாய் விசாரித்துத் தெரிந்துகொண்டு புஸ்தகத்திற் பதியும் படிக்கும், அப்படிப் பதிவான ஆதரவுகள் நியாய ஸ்தலத்தா ருடைய தீர்ப்புக்குச் சமான மென்றும், அவைகளைப் பற்றி வேறே வியாஜியஞ் செய்யாமலே நிறைவேற்றலா மென்றும், நிபந்தனை செய்தோம். அதனால் ஜனங்களுக்குச் சந்தோஷம் உண்டாகி எங்களை மேன் மேலும் ஆசீர்வதித்தார்கள். வக்கீல்களுக்கும், எழுத்துக் கூலிக்காரர்களுக்கும், வருமானங் குறைந்து போய் விட்டதால், அவர்கள் எங்களுக்கு அளவிறந்த சாபங்கள் கொடுத்தார்கள். அவர்களுடைய சாபங்களுக்கு ஜனங்களுடைய ஆசீர்வாதங்களை ஈடாகக் கொடுத்துவிட்டு, நாங்கள் நினைத்த காரியங்களை நிர்ப்பய மாக நடத்தினோம். இவிகித சம்பந்தமான வியாஜியங்க ளெல்லாம், மேற் கண்டபடி சுலபமாய்த் தீர்ந்து போய் விட்டபடியால், பாக வழக்குகள், பாத்திய வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், வாயுடம்படிக்கை பற்றிய வழக்குகள் (Tort) என்கிற நஷ்ட வழக்குகள் முதலியவைகள் மட்டும் நியாயஸ்தலங்களில் செய்யப்பட்டன. அந்த வழக்குகளும் கால தாமத மில்லாமலும், ஜனங்களுக்குத் தொந்தரவும் செலவு மில்லாமலும், சீக்கிரத்திலே தீரும்படிக்கு அநேக விதிகளை ஏற்படுத்தினோம்.