பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

292

பிரதாப முதலியார் சரித்திரம்

திரங்களைத் தாங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளாமலும் வக்கீல்களுடைய வாய்ப்பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கிறதும், வக்கீல்கள் நியாயத்தை எடுத்துக் காட்டவில்லையென்று அவர்கள் மேலே குறை சொல்லி அநியாயத் தீர்ப்புச் செய்கிறதுமா யிருந்தார்கள். சில அதிகாரிகள் அஷ்டாவதானஞ் செய்வதுபோல் அநேக வியாஜ்ஜியங்களை ஒரே காலத்தில் விசாரிக்கத் தொடங்கி ஒன்றையும் முடிக்காமல் திருப்பதி அம்பட்டன் க்ஷவரஞ் செய்ததுபோல் அரையுங் குறையுமாகத் தீர்த்துவந்தார்கள். சில அதிகாரிகள் விசாரணைக் கெடுவை ஒத்தி வைத்துக் காலத்தை நீட்டிவிட்டுக்கொண்டு கக்ஷிக்காரர்களை சிக்ஷித்து வந்தார்கள். சிலர் விசாரணைக் கெடுவை வழக்காளிகளுக்குத் தெரிவிக்காமல் குட்டிச் சுவரிலே தேள் கொட்டத் தண்ணீர்மிடாவிலே நெறி கட்டினதுபோல், நியாயம் ஒரு பக்ஷமிருக்க வேறொரு பக்ஷத்தில் நியாயாதிபதிகள் இருந்துகொண்டு அதற்குத் ததானுசாரமாகச் சாக்ஷிகளை அதட்டி உருட்டி வாக்குமூலங்கள் வாங்கிக்கொண்டு, எக்கச் சக்கமாய்த் தீர்மானித்து வந்தார்கள். சில நியாயாதிபதிகள் தீர்க்கதரிசிகள் போல, வழக்காளிகளைப் பார்த்த மாத்திரத்தில் இவன் யோக்கியன் அவன் அயோக்கியன் என்று தப்பான எண்ணங்கொண்டு, அதற்குத் தக்கபடி சாதக பாதகஞ் செய்து வந்தார்கள். செப்பிடு வித்தைக்காரர்கள் ஒரு நிமிஷத்தில் செப்பையும் பந்தையும் மாற்றுவதுபோலச் சில நீதியதிபர்கள் ஒருவருடைய அநுபவச் சுதந்திரங்களை ஒரு நிமிஷத்தில் மாற்றி அநியாயஞ் செய்தார்கள். குற்றவிசாரணை செய்வதற்கு முன்னமே ஒவ்வொருவரையும் குற்றவாளியென்று நிச்சயித்து தண்டனை செய்வதிலே முயற்சியாயிருந்த நீதிக்காரர்களும் பலரே. சில நியாயாதிபதிகள் எப்போதும் வாதி பக்ஷத்திலும் சில நியாயாதிபதிகள் எப்போதும் பிரதிவாதி பக்ஷத்திலு மிருந்து நியாயத்தைப் புரட்டினார்கள். சில