பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற்‌ சீர்திருத்தங்கள்‌

293

நியாயாதிபதிகள் வியாஜ்ஜியக்காரர்களைக் கண்டவுடனே அக்கினி தேவனுக்கு அபிஷேகஞ் செய்ததுபோல், அவர்கள் மேல் சீறி விழுந்து அசப்பிய வார்த்தைகளைப் பிரயோகித்து வந்தார்கள். நாங்கள் அந்த அதிகாரிகளுக்கு அபராதம் ஆக்கினைகள் விதித்து அவர்கள் இனிமேல் அநுசரிக்கவேண்டிய நீதி நெறிகளைப் போதித்ததுமன்றி, ஒவ்வொரு வழக்கிலும் உண்மையைக் கண்டுபிடிக்க அவர்களால் கூடிய பிரயாசம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், எந்த நியாயாதிபதியாவது நியாயத்தைக் கண்டுபிடியாமல் தீர்மானஞ் செய்தால் அவன் உத்தியோகத்துக்கு அநர்கனென்னும் எச்சரிக்கை செய்தோம்.

வியாதி வந்தபிற்பாடு பரிகாரஞ் செய்வதைப் பார்க்கிலும் வியாதி வராமலே தடுக்கப் பிரயாசப்படுவது நன்மையா யிருப்பதுபோலக் குற்றம் நடந்த பிற்பாடு, தண்டிப்பதைப் பார்க்கிலும் குற்றம் நடவாமலே தடுக்கப் போலீசுவீரர்கள் பிரயாசப்பட வேண்டுமென்று உத்தரவு செய்தோம். குற்றவாளியைத் தண்டிக்கிற விஷயத்தில் நீதியும் இரக்கமும் பொருந்தி இருக்க வேண்டுமென்றும், குற்றம் ருசுவாகியவரையில் ஒவ்வொருவனும் மாசற்றவனென்று ஊகிக்க வேண்டுமென்கிற விதியையும், சந்தேகத்தின் பிரயோசனத்தைக் குற்றவாளிக்குக் கொடுக்க வேண்டுமென்கிற விதியையும் அநுசரிக்க வேண்டுமென்றும், தண்டனையான குற்றவாளி அப்பீல் செய்கிற பக்ஷத்தில் அப்பீல் முடிவாகிற வரையில் தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் கட்டளை யிட்டோம். குற்றவாளிகளைச் சாட்டை முதலிய கருவிகளால் அடிக்கும்படி விதிக்கப்படுகிற தண்டனையானது மிருகங்களுக்கும் மிருகப்பிராயமான மிலேச்சர்களுக்கும் உரியதே தவிர நாகரிகமடைந்த தேசங்களுக்கு அநுசிதமாகையால் அந்தக் கொடிய தண்டனை எங்களுடைய ராஜ்ஜியத்தில் இல்லாதபடி நீக்கிவிட்டோம். பகுத்தறி-