பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

பிரதாப முதலியார் சரித்திரம்

வுள்ள சிறு பிள்ளைகள் தண்டிக்கப்படுகிற பக்ஷத்தில் அவர்களை மற்றக் குற்றவாளிகளிடம் சேர்க்காமல் பிரத்தியேகமான இடத்தில் வைத்து அவர்களுக்குரிய தொழில், கல்வி முதலியவைகளைப் பயிற்றும்படி திட்டஞ் செய்தோம். அப்படியே தண்டனை அடைந்த ஸ்திரீகளுக்கும் பிரத்தியேகமான காராக்கிருகம் ஏற்படுத்தி அவர்களுடைய மானத்தைக் காப்பாற்றினோம்.




40-ஆம் அதிகாரம்
குடிகள் இயல்பு—இராஜ பக்தி—
அநியாய பஞ்சகம்

விக்கிரமபுரி சில காலம் குடியரசா யிருந்த நிமித்தம் அநேக ஜனங்கள் இராஜ பக்தி என்பதையே சுத்தமாய் மறந்து விட்டார்கள். இராஜாவா யிருக்கிற நாங்களே இராஜ பக்தியை உபதேசிப்பது கிரம மல்ல யென்று நினைத்து, சில விவேகிகளை ஏவி, ஜனங்களுக்கு இராஜபக்தியைப் போதிக்கும்படி செய்வித்தோம். அவர்கள் அடியிற்கண்டபடி பிரசங்கித்தார்கள்.

ஒவ்வொரு மனுஷனும் ஜீவிக்கிறதற்குப் பலருடைய உதவி வேண்டியிருப்பதால் ஒவ்வொருவனும் தனிமையாக வனவாசம் செய்வது சாத்தியமில்லாத காரியமா யிருக்கிறது. ஆகையால் ஆதிகாலந் துவக்கிக் கிராமங்களிலும் நகரங்களிலும் ஜனங்கள் கூட்டுறவாய் வாழ்வது வழக்கமாயிருக்கின்றது. விவசாயம், நெசவு, சிற்பம், தச்சுவேலை, கொல்லுவேலை முதலிய பல தொழில்கள் உலகத்துக்கு முக்கியமானபடியாலும், அந்தத்