பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற்‌ செலவுகளை குறைத்தல்‌

301

படியால் நானும் அவளுடைய கருத்துக்கு இசைந்தேன். விசுவாமித்திரர் அண்டங்களைப் புதிதாக சிருஷ்டிக்க ஆரம்பித்ததுபோல, நாங்களும் புதிய ஏற்பாடுகள் செய்யத் துவக்கினோம். விசுவாமித்திரர் நினைத்தபடி முடிக்காமல் மத்தியில் தங்கிவிட்டது போல் நாங்கள் தங்காமல் எங்களுடைய எண்ணங்களைப் பரிபூர்த்தி செய்தோம். ஒரு ஆயுதமில்லாமல் யுத்தமுஞ் செய்யாமல் ஒரு வார்த்தையினாலே படைகளையெல்லாம் ஒழித்துவிட்டோம். மராமத்துப் பூதத்தைக் கிழித்து விட்டோம். அதிகச் சம்பளங்களைக் கழித்துவிட்டோம். இவ்வாறு செழித்து விட்டோம். படைகளிலும் மராமத்து வகுப்பு உத்தியோகத்திலும் அவசியமானவர்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றவர்கள் வீட்டுக்குப் போகும்படி உத்தரவு கொடுத்துவிட்டோம். எங்களாற் பிரதிகூலம் அடைந்தவர்களெல்லாரும் எங்களைத் தூஷித்தார்கள். அநுகூலம் அடைந்தவர்கள் எல்லாரும் பூஜித்தார்கள். நாங்கள் ஒன்றுக்கும் அஞ்சாமல் ஒரு கதையிற் சொல்லியபடி, எங்களுக்கு யுக்தமாய்த் தோன்றின பிரகாரம் நடப்பித்தோம். அந்தக் கதையைச் சுருக்கிச் சொல்லுகிறேன்.

“பேசுகிற பக்ஷியும், பாடுகிற மரமும், தங்கத் தண்ணீரும், ஒரு மலைச் சிகரத்திலிருப்பதாக ஒரு ராஜகுமாரத்தி கேள்வி யுற்று, அவைகள் தனக்கு வேண்டுமென்று தன்னுடைய தமையன்மார்களிடத்திலே தெரிவித்தாள். மூத்த தமையன் அவைகளைத் தான் கொண்டுவருவதாகச் சொல்லிப் பயணம் புறப்பட்டான். அவன் புறப்பட்ட இருபதாம் நாள் ஒரு சந்நியாசியைக் கண்டு அந்த மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தான். சந்நியாசி ராஜகுமாரனைப் பார்த்து “”அந்த மலை மேலே ஏறுவது சுலப சாத்தியமல்ல; ஏறும்போது பயங்கரமான சப்தங்களும் தூஷணமான வார்த்தைகளும் பல பக்கங்களிலும் கேட்கப்படும். அந்தச் சப்தஞ் செய்கிறவர்கள் அரூபிகளானதால், அவர்கள் நம்முடைய கண்களுக்குத்