பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

பிரதாப முதலியார் சரித்திரம்

தோன்றார்கள். மலைமேல் ஏறுகிறவன் அந்தச் சப்தங்களுக்குப் பயப்படாமலும் பின்னே திரும்பிப் பாராமலும் ஏறுவானானால், அவன் மலை மேலே போய்ச் சேர்ந்து அந்த அபூர்வ வஸ்துக்களையுங் கைவசஞ் செய்துகொண்டு திரும்புவான். அவன் பின்னே திரும்பிப் பார்ப்பானானால் உடனே கருங்கல்லாய்ச் சமைந்து போவான். அநேகர் என் சொல்லைக் கேட்காமற் போய்க் கல்லாய் சமைந்து போனார்கள். நீ போனாலும் அப்படித்தான் சம்பவிக்கும்” என்று சந்நியாசி ராஜகுமாரனைப் போக வேண்டாமென்று தடுத்தான். ராஜகுமாரன் தான் அகத்தியம் போகவேண்டுமென்று முஷ்கரஞ் செய்தபடியால் சந்நியாசி மலைக்குப் போகிற மார்க்கத்தைத் தெரிவித்தான். ராஜகுமாரன் மலைமேல் ஏற ஆரம்பித்த உடனே சந்நியாசி சொன்னபடி பல சப்தங்கள் உண்டாயின. “அந்த மூடன் எங்கே போகிறான்? அவனை விடாதே! பிடி! அடி! கொல்லு!” என்றும் இன்னும் பல விதமாகவும் சப்திப்பதைக் கேட்டு ராஜகுமாரன் பீதி உடையவனாய்ப் பின்னே திரும்பிப்பார்த்தான். உடனே கல்லாய்ச் சமைந்து போனான். அவனைத் தேடிக்கொண்டு வந்த அவனுடைய சகோதரனும் சந்நியாசி வார்த்தையைக் கேளாமல் மலைக்குப் போய்க் கல்லானான். ஆண் வேஷம் பூண்டுகொண்டு அண்ணன்மார்களைத் தேடிப் போன ராஜகுமாரத்தி சந்நியாசியைச் சந்தித்து மலைக்குப் போகிற மார்க்கத்தை விசாரித்தாள். அவளையும் போக வேண்டாமென்று சந்நியாசி தகுந்த புத்திமதிகள் சொல்லியும் அவள் கேட்கவில்லை. ஒரு சப்தமுங் கேளாதபடி தன்னுடைய இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு, நிர் விக்கினமாய் மலைமேல் ஏறி, அந்த அபூர்வ வஸ்துக்களையும் ஸ்வாதீனஞ் செய்துகொண்டு, கல்லாய்ச் சமைந்திருந்த அண்ணன்மார் முதலானவர்களையும் எழுப்பிக் கொண்டு, ஒட்டோலகமாய்ப் பட்டணத்துக்குத் திரும்பினாள்.””