பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

பிரதாப முதலியார் சரித்திரம்

புண்ணியம், வக்கீல்களுக்கு வாய் வார்த்தையால் வருகிறபடியால், அவர்கள் எப்போதும் ஆபத்சகாயிகளாயும் தீனோபகாரிகளாயு மிருக்க வேண்டும். அந்த ஏழைகளுக்குப் பொருளுதவி வேண்டுமானாலும் செய்து, அவர்கள் ஜயித்த பின்பு, அந்தத் தொகையை வாங்கிக் கொள்வதும் பெரிய உபகாரந் தானே!

சில தேவதைகள் அடிக்கடி பலி கேட்பதுபோலச் சில வக்கீல்கள் ஒரு வழக்கில் அடிக்கடி பீஸ் கேட்பதாகக் கேள்விப்படுகிறோம். எப்படியென்றால் அவர்கள் வியாஜ்ஜிய ஆரம்பத்திலே சரியான பீஸ் வாங்கியிருக்கப் பிறகு வியாஜ்ஜியம் முதல் விசாரணையாகும்போது வேறு பீஸ் கொடுக்கவேண்டுமென்றும் கொடாதவரையில் கோர்ட்டில் ஆஜராகமாட்டோமென்றும் பிடிவாதஞ் செய்கிறார்கள். கக்ஷிக்காரனுக்கு வேறே மார்க்கமில்லாமையால் அப்போதும் பீஸ் கொடுக்கிறான். பிறகு சாக்ஷி விசாரணையாகும்போதும் வக்கீல்கள் கோர்ட்டுக்கு வரமாட்டோமென்று படுத்துகிறார்கள். அல்லது வேறொரு கோர்ட்டில் அதிக பீஸ் வருவதாகச் சொல்லிப் பயணச் சன்னாகமாயிருக்கிறார்கள். அப்போதும் அவர்களுக்குத் தக்ஷணை கொடுத்து வசப்படுத்த வேண்டியதாயிருக்கிறது. இப்படியாகச் சிவில் விஷயமாவது அல்லது கிரிமினல் விஷயமாவது விசாரணையாகிற ஒவ்வொரு தினத்திலும் புதிது புதிதாக வக்கீலுக்குக் காணிக்கை கொடுத்து கக்ஷிக்காரன் பிக்ஷைக்காரனாகிறான். ஒரு வழக்குக்காக வக்கீல் பூரணப் பீஸ் வாங்கிக்கொண்டு அதைக் கோர்ட்டில் தாக்கல் செய்தபின்பு, அந்த வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு அனுப்பப்படுகிற பக்ஷத்தில் அந்தக் கோர்ட்டிலும் பேச அந்த வக்கீலுக்குப் பாத்தியம் இருந்தால்கூட, வேறு பீஸும் போக வர வழிச்செலவும், படிச்செலவும் முதலியவைகளௌம் வாங்கிக் கொண்டு தான் அந்த வக்கீல் மற்றொரு கோர்ட்டுக்குப் போகிறார். குறித்த தினத்தில் விசாரணை யாகாத பக்ஷத்தில் மறுபடியும் வேறு பீசும் படிச்செலவுகளும், வக்கீல் வாங்கிக்கொள்கிறார்