பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரைநடை நூல்கள்‌ இன்றியமையாமை

521

எவ்வளவு குறைவாயிருக்கிறதோ அவ்வளவுக்கு ராஜ பாஷைகளில் தங்களைச் சமர்த்தர்களென்று சகலரும் எண்ணுவார்களென்று நினைத்துச் சுய பாஷைகளை முழுவதும் அலக்ஷியம் செய்கிறார்கள். அவர்கள் தமிழ்ப் புத்தகங்களைக் கையிலே தொடுகிறதாயிருந்தால், பாம்பின் புற்றுக்குள்ளே கையை விடுவது போலிருக்கும், அவர்களுக்குத் தமிழ் பாஷை பேசுகிறது வேப்பிலைக் கஷாயம் குடிப்பது போலிருக்கும். தமிழ் வார்த்தைகளைக் கேட்பதும் அவர்களுக்குக் கர்ணக்கடூரமா யிருக்கும். அவர்கள் தமிழ் பாஷை பேசினாலும் முக்காற் பங்கு இங்கிலீஷும் காற் பங்கு தமிழுமாகக் கலந்து பேசுவார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமும் இல்லை பாஷாபிமானமுமில்லை. யானை முதல் எறும்பு கடையாக உள்ள சகல ஜீவ ஜந்துக்களுக்கும், தனித்தனியே ஒவ்வொரு பாஷை சொந்தமாயிருக்கின்றது. அந்தந்த ஜந்துக்களுக்குரிய பாஷைகளை அவைகள் ஒரு காலத்திலும் மறவாமல் எப்பொதும் உபயோகித்துக்கொண்டு வருகின்றன. இங்கிலீஷ்காரர் முதல் ஐரோப்பியர்கள், தாங்கள் தங்களுடைய சொந்த பாஷைகளை எவ்வளவோ கௌரவமாகப் போற்றி வருகிறார்கள் என்பதை இந்த வித்தியார்த்திகளே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் ஜன்ம பாஷையாகிய தமிழையும், தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா? தமிழ் நூல்களையே பாராத இவர்கள் அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக்கூடும்? திருவள்ளுவருடைய குறளை அவர்கள் ஜன்மாந்திரத்திலும் பார்த்திருப்பார்களா? கம்பருடைய கற்பனையைக் கனவிலுங் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? அவ்வையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராம பாண்டியனை அணுவளவும் அறிவார்களா? இன்னம் எண்ணிக்கையில்லாத தமிழ்ப் புலவர்களுடைய பிரபந்தங்களை இவர்கள் எக்காலத்திலும் பார்த்திரார்கள்.


21