பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தியோக மமதை

325

யிலும், புத்தியிலும், தனத்திலும், குலத்திலும் தனக்குச் சமான மானவர்கள் ஒருவரும் இல்லை யென்கிற அகம்பாவமும், மமதையும், உடையவன் ஆனான். அவன் இருக்கிற இடத்தில் ஈ பறக்கக் கூடாது. எறும்பு ஊரக் கூடாது, குருவி கத்தக் கூடாது, ஒருவரும் பேசக் கூடாது; எப்போதும் நிசப்தமாயிருக்க வேண்டும். அவனுடைய வீட்டுக்கு எதிரே ஒருவரும் ஜோடு போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது. அங்க வஸ்திரம் போடக் கூடாது. கைவீசிக்கொண்டு நடக்கக் கூடாது. தாம்பூலம் தரிக்கக் கூடாது. சிங்கத்தின் குகை ஓரத்திற் போகிறவர்கள் பயந்து பதுங்கிக் கொண்டு போகிறது போல, இவன் வீட்டுக்கு எதிரே போகிறவர்களும் நடுங்கிக் கொண்டு, நிசப்தமாகப் போக வேண்டும். அவன் வெளியே புறப்பட்டால், உட்கார்ந்திருக்கிறவர்கள் எல்லாரும் எழுந்து விட வேண்டும்; நடக்கிறவர்கள் எல்லோரும் நின்றுவிட வேண்டும்; சகலரும் பூமியிலே விழுந்து சாஷ்டாங்கமாகத் தண்டம் செய்யவேண்டும். அப்படிச் செய்யாதவர்களுக்கு அபராதங்களும், ஆக்கினைகளும் கிடைப்பது சித்தமே. அவனைக் கண்ட வுடனே, ஜோடு போட்டுக் கொண்டிருப்பவர்கள் எல்லாரும், அவைகளைக் கழற்றுகிற வேகத்தைப் பார்த்தால் அவனை அடிப்பதற்காகவே கழற்றுகிறது போலத் தோன்றும். ஆனால் வாஸ்தவத்தில் மரியாதைக்காக ஜோடுகளைக் கழற்றுகிறார்களே யன்றி, அவனை அடிப்பதற்காக அல்ல. அவன் தெருவில் நடக்கும்போது தெரு முழுதும் தனக்கே சொந்தம் போல அடைத்துக் கொண்டு காலொரு பக்கம், கையொரு பக்கம், வேஷ்டியொரு பக்கம், தான் ஒரு பக்கமாக விறைத்துக் கொண்டு நடப்பான். நடக்கும் போது அவனுடைய ஜோடு, அவனைப் படீர் படீரென்று அடித்துக் கொண்டே போகும். அவனை மட்டும் எல்லோரும் வணங்க வேண்டுமே தவிர, அவன் ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டு நடக்கிறதே யல்லாது எவரையும் வணங்குகிற தில்லை. அவன் இறுமாப்புடன் பூமியைப் பார்த்து நடக்கிற தில்லை.