பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

பிரதாப முதலியார் சரித்திரம்

அவன் காலிலே விஷம் தீண்டினாலும் குனிந்து பார்க்கிறதில்லை. தலையிலே வாசற்படி இடித்தாலும் குனிகிறதில்லை.


அவன் அதிகாரி ஸ்தானத்தில் இருக்கும்போது, ஜனங்கள் எல்லோருங் கை கட்டிக் கொண்டும், வேஷ்டிகளைத் தூக்கிக் கட்டிக்கொண்டும், தூரத்தில் நிற்க வேண்டுமேயல்லாது, அவன் சமீபத்தில் ஒருவரும் நெருங்கக் கூடாது. அவன் கண்ணாலே ஒருவரையும் ஏறெடுத்துப் பார்க்கிற தில்லை. அவனுடைய வாயிலே, திட்டுக்களும் உதாசீனங்களும் புறப்படுமே யல்லாது, நல்ல வார்த்தைகள் புறப்படுகிற தில்லை. பேய்க்குக் கள் வார்த்தது போல அவனுடைய முகத்தில் எப்போதும் கோபம் கூத்தாடிக் கொண்டிருக்கிறதே யல்லாது, பொறுமையாக ஒரு காரியத்தையும் விசாரிக்கிற தில்லை. அவனை யார் அதிகமாக வணங்கித் தப்பு ஸ்தோத்திரம் செய்கிறார்களோ, அவர்கள் பக்ஷம் தீர்மானிக்கிறதே யன்றி உண்மையைக் கண்டுபிடித்துத் தீர்மானிக்கிற தில்லை. நான் ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கொண்டு அவனுடைய அதிகார ஸ்தானத்துப் போய், மற்ற ஜனங்களுடன் தூரத்தில் நின்று கொண்டிருந்தேன். அவனை ஏமாற்றித் தீர்ப்புப் பெற்றுக் கொள்வதற்காக, அவனை ஒரு வழக்காளி ஸ்தோத்திரஞ் செய்யத் தொடங்கினான். எப்படியென்றால் ““மஹாப் பிரபுவே! மண்டலாதிபதியே! இந்த பஞ்ச சாஷ்டக் கோடி பூமண்டலத்தில், உங்களுக்குச் சமமாக யாரிருக்கிறார்கள்? தனத்திலே நீங்கள் குபேரன், வித்தையிலே நீங்கள் ஆதிசேஷன், புத்தியிலே பிரஹஸ்பதி, அழகிலே மன்மதன்; சாக்ஷாத் கடவுள் நீங்களே. அது பேசாத் தெய்வம்; நீங்கள் பேசும் தெய்வம். அது அப்பிரத்தியக்ஷம்; நீங்கள் பிரத்தியக்ஷமான தெய்வம். இப்போது, நீங்கள் நினைத்தால் அநேகங் குடிகளை வாழ்விக்கலாம்; அநேகக் குடிகளைக் கெடுத்து விடலாம். அந்தத் தெய்வத்தினாலே அப்படிச் செய்யமுடியுமா?”” என்று பலவாராக முகஸ்துதி பேசிக்கொண்-