பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கர்விகளுக்கு நற்புத்தி

327

டிருந்தான். அந்த அதிகாரியும் தன்னைத் தெய்வமென்றே மனஸ்கரித்துக் கொண்டு, புன்னகையுடன் ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். அப்போது, ஒரு கொள்ளித் தேள் எப்படியோ வந்து அதிகாரியை நறுக்கென்று கடித்து விட்டது. உடனே அந்த பிரத்தியக்ஷமான தெய்வம் கீழே விழுந்து, கட கடவென்று உருள ஆரம்பித்து. வைத்தியர்களும் மாந்திரீகர்களும் வந்து கூடிவிட்டார்கள். நான் “தெய்வத்தைத் தேள் கொட்டுமா?” என்று சொல்லிக் கொண்டு அரண்மனைக்குப் போய் நடந்த சங்கதிகளை யெல்லாம் ஞானாம்பாளுக்கு விளம்பினதுமன்றி, அந்த அதிகாரியை ஒரு நாள் அழைப்பித்துத் தனிமையாக வைத்துக் கொண்டு பின் வருமாறு அவனுக்குப் புத்தி சொன்னேன்.

“மனுஷன் தன்னைத் தானே அறிவானானால், அவன் ஒரு நாளுங் கர்வப்பட மாட்டான். நம்முடைய தேகத்தின் அசுத்தங்களையும் நம்முடைய ஆசாபாசங்களையும் துர்க்குணங்களையும் துஷ்கிருத்தியங்களையும் சித்த விகாரங்களையும் நமக்கு உண்டாகிற வியாதிகளையும் துர்ப்பலங்களையும் தேக அநித்தியத்தையும் மரணத்தையும் நாம் யோசிப்போமானால், நாம் வெட்கப்பட்டுத் தலைகுனிய வேண்டியதேயல்லாமல், கர்வப்படுகிறதற்கு என்ன இடமிருக்கிறது? நாம் அசுத்தமான கர்ப்பத்தில் உற்பத்தியாகி அசுத்தத்திலே பிறந்து அசுத்தத்திலே வளர்ந்து அகசியமான பதார்த்தங்களையே புசித்து அசுசியாகவே ஜீவித்து அசுசியாகவே இறந்து போகிறோம். இரத்தமும் மாமிசமும் எலும்பும் நரம்பும் மலஜலாதியங்களுங்கூடிய நம்முடைய தேகம் அசுத்தமேயன்றி வேறல்லவே. கண்ணிலே பீளை காதிலே குறும்பி மூக்கிலே சளி வாயிலே எச்சில் தலையிலே பேன் தேகமுழுதுந் துர்நாற்றம் இப்படியாக முழுதும் அசுத்தமாக இருக்கிறது. நாம் அடிக்கடி தேகத்தைக் கழுவாவிட்டால் நம்முடைய துர்க்கந்தம் நமக்கே சகிக்குமா?