பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

பிரதாப முதலியார் சரித்திரம்

நம்முடைய வாழ்வுந் தாழ்வும் சுவாமியினுடைய கையில் இருக்கின்றனவே யல்லாது, நம்முடைய ஸ்வாதீனத்தில் என்ன இருக்கிறது? அடுத்த நிமிஷத்தில் இன்னது வருமென்பது நமக்குத் தெரியுமா? நம்முடைய ஆஸ்திகளை நினைத்துக் கர்வப்படுவோமானால், அந்த ஆஸ்திகளும் அநித்தியம்; அவைகளை அநுபவிக்கிற நாமும் அநித்தியர்களா யிருக்கும்போது நாம் எப்படி கர்வப்படக் கூடும்? நாம் பிறக்கும்போது ஒரு கோவணத்துக்குக் கூட வழியில்லாமல் சுத்த நிர்வாணிகளாய்ப் பிறந்து நிர்வாணிகளாயிறந்து போகிறோம். நாம் பிறக்கும்போது ஒரு ஆஸ்தியையும் நாம் கூடக் கொண்டு வந்ததுமில்லை; கூடக் கொண்டுபோவதுமில்லை. நாம் அநுபவிக்கிற பொருள்கள் எத்தனை நாள் நம்மோடு கூடியிருக்கு மென்பதும் நிச்சயமில்லையே! நம்முடைய கல்வியைப் பற்றி நாம் இறுமாப்பு அடைவோமானால், அது நமக்குப் பிறர் போதித்ததேயன்றி நாம் பிறக்கும்போது நம்மோடுகூடப் பிறந்ததல்லவே! அல்லாமலும் நம்முடைய தலையை மிதிக்கும்படியான கல்விமான்கள் உலகத்தில் அநேகர் இருக்கவில்லையா? “எவன் தன்னைத் தானே உயர்த்திக்கொள்கிறானோ அவன் தாழ்த்தப் படுவான். எவன் தன்னைத்தானே தாழ்த்துகிறானோ அவன் உயர்த்தப் படுவான்”” என்பது வேத வாக்கியமல்லவா?

ஜனங்களுடைய நன்மைக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஜனங்களுடைய சம்பளங்களையே அதிகாரிகள் வாங்கிச் சாப்பிடுகிறபடியால் அதிகாரிகள் ஜனங்களுக்கு ஊழியக்காரர்களே யல்லாது எஜமான்கள் அல்லவென்பதை அவர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைக்கவேண்டும். அப்படி எண்ணாமல் ஜனங்களைத் தங்களுக்கு அடிமைகளைப் போல எண்ணுகிற அதிகாரிகள் அக்கிரமிகள் அல்லவா? நீர் மேற்குலமென்று பெருமை பாராட்டிக்கொண்டு மற்றவர்களை யெல்லாம் ஈன ஜாதிகளென்றும் ஏழைகளென்றும் அடிக்கடி தூஷிப்பதாகக் கேள்விப்படுகிறோம். குணமும் புத்தியும், சிரேஷ்டமே தவிர,